பொதுத் தேர்வுக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில்
படிப்பில் மெல்ல கற்பவர்களை அடையாளம் கண்டு "ஸ்பெஷல் கிளாஸ்" வகுப்புகள்
நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான
காலாண்டுத் தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து
இடைத்தேர்வு, செய்முறைத் தேர்வு, அரையாண்டு தேர்வு, பருவத் தேர்வு ஆகிய
தேர்வுகள் நடந்து, மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடக்கவுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு
பள்ளிகளும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவருக்கான பாடத்திட்டங்களை
நடத்தி முடித்துவிட்டன. தற்போது, பாடங்களை மடப்பாடம் செய்தல் வகுப்பு
தேர்வு நடத்தல் ஆகியவை நடக்கிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள
மாணவர்களில் மெல்ல கற்கும் (ஸ்லோ லேனர்) மாணவர்களை அடையாளம் கண்டு சிறப்பு
வகுப்புகள் (ஸ்பெஷல் கிளாஸ்) எடுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்காக, வழக்கம்போல் பள்ளி வேலை நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு
வகுப்புகள் நடத்தப்படும்.
மாலை 4.30க்கு பள்ளியின் வேலை நேரம் முடிந்தவுடன் அடையாளம்
காணப்பட்ட "ஸ்லோ லேனர்" மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கூடுதல்
வகுப்பு எடுக்க வேண்டும். அந்த ஸ்பெஷல் கிளாஸில் வகுப்பு தேர்வு, புரியாத
பாடங்களை திரும்ப நடத்துதல், மாணவரின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துதல் ஆகிய
பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
அதே போல், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஸ்லோ
லேனர்களின் கல்வித் தரம் மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், வரும் ஐந்து மாதங்களில்
அரசுப் பள்ளி மாணவர்கள் முழு தேர்ச்சி கொடுக்க முடியும் என, மாவட்ட கல்வி
அதிகாரிகள், நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: "அரசு பள்ளி
மாணவர்களுக்கு, தேவையான அனைத்து வசதிகளும் பள்ளிக் கல்வித் துறை செய்கிறது.
பொதுத் தேர்வு முறைகளை எளிதாக்க நவீன முறைகளை செயல்படுத்துகிறது. தனியார்
பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் தற்போது, ஸ்லோ லேனர்கள்
அடையாளம் காணப்பட்டு, சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். தேர்ச்சி
சதவீதத்தை கூட்ட, கல்வித் துறை அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்களுக்கு பாடப்புத்தகம் மட்டுமின்றி, ஸ்லோ
லேனர்களுக்காக சிறப்பு கைடுகள் மூலமாக, பாடம் நடத்தவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளியமுறையில் பாடங்கள் நடத்தி, அதிக தேர்ச்சி
சதவீதம் எடுக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...