"டாக்டர்களின் சான்றிதழ்களை, நோயாளிகள்
சரிபார்க்கும் நேரம் வரலாம்; எனவே, மருத்துவ கல்லூரிகளை ஒழுங்குபடுத்த,
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர்
நீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், போலி சான்றிதழ் வழங்கியதாகவும்,
விசாரணைக்கு ஆஜராகவும், தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு, இந்திய
மருத்துவ கவுன்சில் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாலாஜி கல்வி அறக்கட்டளையின் தலைவராக
எம்.கே.ராஜகோபாலன் உள்ளார். இந்த அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியில்,
மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி; காஞ்சிபுரத்தில், சத்ய சாய் மருத்துவ
கல்லூரி, இயங்குகின்றன. சத்ய சாய் மருத்துவ கல்லூரியில், இந்திய மருத்துவ
கவுன்சிலின், ஆய்வுக் குழு, ஆய்வு நடத்தி, குறைகளை சுட்டிக் காட்டியது.
பின், அடுத்ததாக ஒரு ஆய்வுக்குழு ஆய்வு செய்து, உள்கட்டமைப்பு வசதிகளில்
திருப்தி ஏற்பட்டதாக கூறி, மாணவர்கள் சேர்க்கைக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், சி.பி.ஐ.,யின் ஊழல் எதிர்ப்பு
பிரிவு, திடீரென மருத்துவக் கல்லூரியில் சோதனை நடத்தியது. கல்லூரியின்
தலைவர், நிகர்நிலை பல்கலையின் துணைவேந்தர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு
செய்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை, எழும்பூரில் உள்ள
கோர்ட்டில், இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இருவரும், வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, போலி ஆவணங்கள், சான்றிதழ்
அளித்திருப்பதாகவும், ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு
விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சில்,
அறக்கட்டளையின் தலைவர் ராஜகோபாலனுக்கு, நோட்டீஸ் அனுப்பியது. இதை
எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜகோபாலன் மனுத் தாக்கல்
செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த
உத்தரவு: கல்லூரி ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பின்,
மனுதாரர் கோர்ட்டை அணுகியுள்ளார். தற்போது, கல்வி என்பது வியாபாரமாகி
விட்டது. அடிப்படை வசதியற்ற மருத்துவ கல்லூரிகள், அரை வேக்காட்டு
மருத்துவர்களை தான் தர முடியும்.
எம்.பி.பி.எஸ்., இடங்கள், கோடிகளுக்கு ஏலம்
விடப்படுவதாக செய்திகள் வருகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்களை
சேர்ப்பதாகவும், வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும், கல்லூரிகள் தரப்பில்
தெரிவிக்கப்படுகிறது. ஒரு வழக்கில் கூறும்போது, நன்கொடை அளித்த
மாணவர்களுக்கு, கேள்வித் தாள் முன்கூட்டி வழங்கப்பட்டு விடும் என,
தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேடுகளை தடுக்க, தற்போது எந்த
நடைமுறையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், புதிது புதிதாக மருத்துவக் கல்லூரிகள்
வருகின்றன. நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில
அரசுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், பல மருத்துவக் கல்லூரிகளை
கட்டுப்படுத்த முடியவில்லை. அதிக மதிப்பெண் வழங்கவும், தோல்வியடைந்த
மாணவனை, தேர்ச்சி பெற வைக்கவும், கணிசமான பணத்தை, சில நிகர்நிலை
பல்கலைக்கழகங்கள் பெறுவதாக, கூறப்படுகிறது.
இத்தகைய நிலை தொடர்ந்தால், டாக்டர்களின்
சான்றிதழ்களை, நோயாளிகள் சரிபார்க்க வேண்டிய தருணம் ஏற்படும். எனவே,
மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவ கவுன்சில் தான், இதை ஒழுங்குபடுத்த
வேண்டும். மருத்துவ கவுன்சிலின், நெறிமுறை குழுவுக்கு அதிகார வரம்பில்லை
என, மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...