கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்குரிய
விளையாட்டு நிதி அதிகரிக்கப்படாததால், வட்டார விளையாட்டுடன், மாணவர்கள்
நடையை கட்டும் நிலை தொடர்கிறது.
விளையாட்டில் ஆர்வமுள்ள, மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து,
அவர்களை தயார் செய்ய, பள்ளிகளில் விளையாட்டு நிதி ஆறு முதல் 8ம் வகுப்பு
வரை ரூ.7, ஒன்பது முதல் 10ம் வகுப்பு வரை ரூ.14, மேல்நிலை மாணவர்களுக்கு
ரூ.20-ம் ஒதுக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக இந்த தொகை தான் ஒதுக்கப்பட்டு
வருகிறது. இந்த நிதியில் தான் விளையாட்டு உபகரணங்கள் வாங்க வேண்டும். 10
ரூபாய்க்கு விற்ற பந்து, இன்று 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூ.100க்கு
விற்ற ஹாக்கி ஸ்டிக், இன்று ரூ.700 வரை உயர்ந்துள்ளது. இதனால், 400
மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில், குழு போட்டிகளில் இரண்டு பிரிவினரையும்,
தனிப்பிரிவில் அதிக பட்சம் 10 மாணவர்களை மட்டுமே உருவாக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்கள், வட்டார அளவில் நடக்கும்
போட்டியில் பங்கேற்கின்றனர். வட்டார விளையாட்டுக்கு செல்லும் மாணவருக்கு
உணவு, பஸ் கட்டணம் உள்ளிட்டவைக்காக 40 ரூபாய், மாவட்ட போட்டிக்கு 50 ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒதுக்கப்படும் ரூபாயில் விளையாட்டு வீரர்களால்
வயிற்றை கூட சரியாக நிரப்ப முடிவதில்லை. வட்டார அளவிலான விளையாட்டில்
வாட்டம் இழந்து திரும்பி விடுகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க மாநில உயர்மட்ட குழு
உறுப்பினர் சின்னையா அம்பலம் கூறியதாவது: "அரசு பள்ளிகளில்
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் தான் படிக்கின்றனர். கல்வி எப்படி
கற்றாலும், உடற்கல்வி இன்றியமையாதது. கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக
விளையாட்டு நிதி உயர்த்தப்படவில்லை.
இதனால், ஆசிரியர்கள் தங்கள் கையிலிருந்து செலவழித்து தான்,
மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் நிலை உள்ளது. விளையாட்டில்
ஈடுபடும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக முக்கியம்.
ஆனால், அவர்களுக்கு சாப்பாடு மட்டுமே வழங்கும் நிலை உள்ளது.
விளையாட்டு நிதி குறைவால், ஹாக்கி எனப்படும் விளையாட்டு
அரசு பள்ளிகளில் மங்கி வருகிறது. மாணவர்களில் உடற்கல்வி சம்பந்தமான ஆலோசனை
கூட்டம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அளவிலேயே நடக்கிறது. உடற்பயிற்சி ஆசிரியர்கள்
பங்கேற்பது இல்லை.
இதனால் மாணவர்களின் கோரிக்கை அரசின் காதுக்கு எட்டுவதில்லை.
விளையாட்டு நிதியாக 6-8ம் வகுப்பு வரை ரூ.50, 9-10ம் வகுப்பு வரை ரூ.75,
மேல்நிலைக்கு ரூ.100 ஒதுக்க வேண்டும், என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
அரசு, மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில்
உடற்கல்விக்குரிய விளையாட்டு நிதியை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...