Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்


               உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால், பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும். 

           ஆம், அதுதான் உண்மை. சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் டிப்ளமோ கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

               ஆனால், உலகத்தரம் என்பது நமக்கு கனவாகவே இன்னும் இருக்கிறது. பல பட்டதாரிகள் முறையான வேலையற்றவர்களாகவே இருக்கிறார்கள். கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே வேளையில், தரமான மற்றும் தகுதியான ஆசிரியர்கள் என்ற அம்சங்கள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.

               கற்பித்தலில் ஒரு புத்தாக்க முயற்சியைக் கொண்டு வருதலின் மூலமாக, ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண முடியும். பொதுவாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக, வகுப்பில் அமர்வதற்கு முன்னதாகவே, பாடங்கள் மற்றும் லெக்சர்களை அறிய மாணவர்களால் முடியும். இதன்மூலம், நுணுக்கமாக சிந்திக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகிறார்கள். ஒரு ஆசிரியரின் பணி என்பது அறிவைக் கடத்துவதல்ல, மாறாக, ஒரு மாணவரை சிந்திக்கத் தூண்டுவதாகும்.

             ஆசிரியர்கள் என்பவர்கள், மாணவர்களை வெறும் பாடங்களில் தேர்ந்தவர்களாக மாற்றி, அவர்களை ஒரு பட்டதாரியாக ஆக்குவதை மட்டும் லட்சியமாக கொண்டு செயல்படுதல் கூடாது. ஏனெனில், இந்த முறையில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், மாணவர்களின் நினைவில் இருப்பதில்லை மற்றும் பயன்படுவதில்லை. ஒரு மாணவர், வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்.

             கற்பித்தலில் ஒரு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கென்று, சில தொழில்நுட்பங்கள் உள்ளன. இத்தொழில்நுட்பங்களை திறன்வாய்ந்த ஆசிரியர்களால் பயன்படுத்த முடியும். முதலில், ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் இயல்பான ஆர்வம் இருக்க வேண்டும். இன்று எந்த அளவில் அந்த ஆர்வம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பது பெரிய கேள்வி?

              உண்மையான ஆர்வத்துடன், வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பேரார்வத்துடன் ஆசிரியர் பணிக்கு வருபவர்கள் மிகச் சொற்பமானவர்களே என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்களுக்கு, திறன்சார் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுகின்றன.

வாழ்க்கை முழுவதும் கற்றல்

              பொதுவாக, வெளிநாட்டுப் பல்கலைகளில், ஆராய்ச்சி பேப்பர்களை சமர்ப்பிப்பது ஒரு கட்டாய செயல்பாடாக உள்ளது. தொடர்ச்சியான கற்றல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி பேப்பர் வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும், பல செமினார்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

               உயர்கல்வியில், தற்போது, ஆசிரியர் பற்றாக்குறை என்ற விஷயத்தைவிட, கவலைத்தரக்கூடிய இன்னொரு விஷயம் என்னவெனில், ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய, குணநலன், திறன், உற்சாகம் மற்றும் தலைமைத்துவப் பண்பு ஆகியவைதான் கவலைத்தரக்கூடியவையாக இருக்கின்றன.

                  பாட வேளையின்போது தேவையான சிறந்த உதாரணங்களைக் கூறுதல், வகுப்பறைக்குள் நடைமுறை உலகின் சூழலைக் கொண்டு வருதல், பகுப்பாய்வு செய்ய மாணவர்களை ஊக்குவித்தல், வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் இரக்க உணர்வுடன் செயல்படுதல் போன்றவை ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்புகள்.

                ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் அடிப்படை ஆதாரமே, தரமான ஆசிரியர்கள்தான் என்பதை, ஒவ்வொரு கல்லூரியும், பல்கலையும் உணர வேண்டும். எனவே, ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி கொடுத்து, அவர்களின் திறனை மதிப்பிடும் ஒரு பயிற்சித் துறை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இருப்பது கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது.

                       19 - 24 வயதுக்குள் இருக்கும் மாணவர்களை கையாள்வது என்பது, சவால்கள் நிறைந்த ஒரு கலை. பாடங்களின் மீது மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா? மற்றும் அதை அவர்கள் விரும்புகிறீர்களா? என்பதை உறுதிசெய்ய, பல்வேறு கற்பித்தல் - கற்றல் மாதிரிகளை, பல்கலைகள், தங்களிடம் வைத்திருக்க வேண்டும்.

              ஆசிரியர்கள், நாட்டின் சிறந்த அறிவுத்துறையாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களின் சொந்த உரிமையில் ஆசிரியர்களாக இருப்பதோடு, வித்தியாசமாக சிந்திப்பதற்கான திறன்களைப் பெற்று, மாற்றங்களை ஏற்கும் தன்மையைப் பெற்று, மாணவர்களை கவர்ந்து, உற்சாகப்படுத்தி, உதாரணங்களை எடுத்தாண்டு, ஒரு சிறந்த நாட்டை கட்டமைப்பதில், தனது பங்கை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive