Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அமெரிக்காவில் எம்.எஸ்.டபிள்யு., படிப்பிற்கு வேலைவாய்ப்பு எப்படி?


              அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்...

           நான் உயிரித் தொழில்நுட்பத்தில், முதுநிலை (எம்.எஸ்சி.,) பட்டம் பெற்றிருக்கிறேன். அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புகிறேன். அங்கு வேலை பெறுவது எப்படி? அமெரிக்க ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? பிரியா ஜோதி, சென்னை

              பல பொது மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரம், அந்தந்த நிறுவனங் களின் இணையதளங்களில் வெளியிடப்படும். மற்றவர்கள் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் வழியாகவும், வேலைவாய்ப்புள்ள நகரங்களில் வெளிவரும் உள்ளூர் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் மற்றும் வெளியிடுகின்றனர். இந்திய நிறுவனங்களைப் போல, அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப, உரிய திறனும் அனுபவமும் உள்ள நபர்களையே தேடுகின்றன.

              அமெரிக்க வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பொதுவாக, விண்ணப்பிக்கும் நபர்கள் அந்த வேலையைப் பெறுவதற்குரிய தகுதி, அனுபவம் மற்றும் போட்டித் திறன் ஆகியவற்றை குறிப்பதாக இருக்கும். வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்வது, இணைய தளம் மற்றும் செய்தித் தாள்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் ஆகியவையே, அமெரிக்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அறிவதற்கான சிறந்த வழிகள். அவற்றின் மூலம், அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கு ஒருவர் எந்த அளவுக்குத் தகுதியுடையவராக இருக்கிறார் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

              அமெரிக்க ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது உங்கள் மொழியறிவை மேம்படுத்திக்கொள்ளவோ விரும்பினால், காண்க: http://americanenglish.state.gov என்ற இணையதளம் வழியாக கூடுதல் தகவல் அறிய: http://chennai.usconsulate.gov/resources.html சனிக்கிழமைதோறும் திரையிடப்படும் ஆங்கிலப் படம் மற்றும் வழிகாட்டும் புத்தகங்கள் உள்ளிட்ட ஆங்கிலப் பயிற்சியை வளர்த்துக் கொள்ள உதவும் வாய்ப்புகளை, எமது அமெரிக்க நூலகம் வழங்குகிறது.

           சமூகப் பணியில் நான் முதுநிலை (எம்.எஸ்.டபிள்யு.,) பட்டம் பெற்றிருக்கிறேன். அமெரிக்காவில் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்பு உண்டா? அவ்வாறு இருப்பின், நான் எங்கே அதற்கு பதிவு செய்ய வேண்டும்? டோபல் போன்று எத்தகைய தேர்வுகளை நான் எழுத வேண்டும்? சோமசுந்தரம், கோவை

                முந்தைய கேள்விக்கான பதில் உங்களுக்கும் பொருந்தும். மேலும், அயல்நாட்டவர்கள் சமூகப் பணியாளர்களாக வேலை செய்யலாமா என்பது தொடர்பான கேள்விகளுக்கு, சமூகப் பணி கல்விக் கவுன்சில் (www.cswe.org) வழங்கும் சர்வதேச சமூகப் பணிப் பட்டப்படிப்பு அங்கீகாரச் சேவை பதில் தரக்கூடும்.

                  அயல்நாட்டவர்களின் பட்டப்படிப்பு அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், மாகாண அளவிலான உரிமத்தைப் பெறுவதும் கூடுதல் தேவையாக அமையும். இத்தகைய உரிமத்தைப் பெறுவதற்கு, சமூகப் பணியாளர், வாய்மொழி மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இத்தேர்வு ஆங்கிலத்திலேயே நடத்தப்படும். அதனால், உரிய ஆங்கிலத் தேர்ச்சியும் அவசியம். கணவர் எச்1 விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.

                  அங்கீகாரம் பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற மனைவி, செல்லத் தக்க எச்-4 விசாவில் அங்கு இருக்கிறார். அவர் வேலைக்கு விண்ணப்பிக்கலாமா? இன்னொரு கேள்வி - அமெரிக்காவில் பொறியியலில் எம்.எஸ்., பட்டம் பெற்ற மனைவி, எப்-1 விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அதை எச்-4 விசாவாக மாற்ற முடியுமா? எஸ். முகுந்தராஜன், கத்தார்

                ஒவ்வொரு விசா வகையும் வேறுபட்டதாகும். ஒருவர், ஒரே சமயத்தில் பல வகை விசாக்களை வைத்துக்கொள்ள முடியும். ஒரு விசாவை ஏற்கனவே வைத்திருப்பது, இன்னொரு வகை விசாவை பெறுவதற்கான உங்கள் தகுதியை நீக்கிவிடாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விஷயத்தில், மனைவிக்குப் பல வழிகள் உள்ளன. எச்4 விசா வைத்திருப்பவர் வேலை செய்ய அனுமதியில்லை. படிக்கலாம்.

                அதனால், எச்-4 விசா வைத்திருப்பவர் அமெரிக்காவில் இருக்கும் போது விசா வகையை மாற்றுவது அவசியமற்றது. எப்-1 விசா வைத்திருப்பவருக்கும் இதுவே பொருந்தும். மாணவராக இருக்கும் காலத்தில் எச்-1பி விசா வைத்திருப்பவரை திருமணம் செய்து கொண்டதாலேயே, தொடர்ந்து அவர் மாணவராகவே இருக்கும் பட்சத்தில், விசா வகையை மாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை. அமெரிக்காவில் ஒருவர் இருப்பதற்கான முதன்மைக் காரணத்தைக் குறிப்பவையே விசாக்கள்.

               ஒருவர் தற்போது வைத்திருக்கும் விசா, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில், அவருக்குரிய அதிகபட்ச பலன்களைத் தராத பட்சத்தில், விசா வகையை மாற்றிக்கொள்வது குறித்து அவர் பரிசீலிக்கலாம். விசா வகையை மாற்றிக்கொள்வது என்பது பொதுவாக நடப்பது தான். இந்த நடைமுறை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் தகவல் அறிய, காண்க: http://www.dhs.gov/visatypes

               என் மகன் அமெரிக்காவில் 2009ம் ஆண்டு பிறந்தான். அவனுக்கு இப்போது 4 வயது. நாங்கள் தற்போது இந்தியாவில் இருக்கிறோம். இங்கேயே நிரந்தரமாக வசிக்க முடிவு செய்திருக்கிறோம். என் மகனின் பாஸ்போர்ட் மே 2014 வரையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதற்கான பி.ஐ.ஓ., கார்ட் 2019 வரையும் செல்லத்தக்கதாக உள்ளது. மகனின் பாஸ்போட்டை புதுப்பிப்பது போல, பி.ஐ.ஓ., கார்டையும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று கருதுகிறேன். எனது மகனின் பாஸ்போர்ட் மற்றும் பி.ஐ.ஓ. கார்டை 6 மாதங்களுக்கு ஒருமுறை காவல் துறையின் சோதனைக்கு நான் அளிப்பது அவசியமா? ஐந்தாண்டுகளுக்குப் பிறகு என் வேலை நிமித்தம் நாங்கள் அமெரிக்கா செல்ல நேரிடலாம். சார்பு விசா இல்லாமல் அவன் என்னுடன் அமெரிக்கா வர முடியுமா? 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் படிக்க விரும்பினால், அவன் எப்1 விசா எடுக்க வேண்டுமா? அமெரிக்கக் குடியுரிமையோ அல்லது நிரந்தரமாக வசிப்பதற்கு உரிய கிரீன் கார்டோ அல்லது வேலை பார்க்க அங்கீகாரம் அளிக்கும் இ.ஏ.டி.,கார்டோ எங்களிடம் இல்லை. எங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துக? சந்திரா, சேலம்

               அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், இதர குடிமகன்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் உங்கள் மகனுக்கும் உண்டு. மிக அரிதாக மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் தவிர, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்கக் குடியுரிமை கிடைத்து விடுகிறது. அவர்கள் எக்காரணம் கொண்டும் அமெரிக்காவுக்கு வர விசா தேவையில்லை. அமெரிக்காவில் அவர்கள் தங்கியிருப்பது தொடர்பான கால வரம்போ அல்லது நிபந்தனைகளோ இல்லை.

               அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில், உங்கள் மகனுக்கு செல்லத்தக்க அமெரிக்க பாஸ்போர்ட் மட்டுமே தேவை. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் 5 ஆண்டுகள் செல்லத்தக்கவை. 16 வயதுக்குப் பிறகு வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகள் 10 ஆண்டுகள் செல்லத்தக்கவை. பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் அமெரிக்கக் குடிமகன்களுக்கான இதர சேவைகள் குறித்த கூடுதல் தகவல்களை அறிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இணைதளத்தைக் காண்க: www.travel.state.gov பி.ஐ.ஓ., கார்டு தொடர்பான தகவலுக்கும் உதவிக்கும் இந்திய அரசைத் தொடர்பு கொள்ளுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive