பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை
கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை
செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர
ஆலோசனையில் இறங்கி உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ,
மாணவியர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த பொதுத்தேர்வை
பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2
தேர்வை, ஏழு லட்சம் மாணவர்களும் எழுதினர். தனித்தேர்வு மாணவர்களையும்
சேர்த்தால், 20 லட்சத்தை தாண்டுகிறது. இத்தனை லட்சம் மாணவர் களுக்கும்,
தேர்வை நடத்தி, குளறுபடி இல்லாமல், தேர்வு முடிவை வெளியிடு வதற்குள்,
தேர்வுத்துறை, திக்கி, திணறி விடுகிறது. அதிலும், தேர்வுகளின்போது நடக்கும்
பல்வேறு குளறுபடிகள், தேர்வுத்துறைக்கு, பெரும் தலைவலியாக இருந்து
வருகிறது.
தொடரும் குளறுபடிகள்: கடந்த பொதுத்தேர்வில்,
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகிய இரு தேர்வுகளிலுமே, வரிசையாக தொடர்
குளறுபடிகள் நடந்தன. பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாளில், 63
மதிப்பெண்களுக்கு உரிய கேள்விகள், 2012ல் கேட்கப்பட்ட கேள்விகளாகவே
இருந்தன. கேள்வி எண்கள் கூட மாறாத அளவிற்கு, அப்படியே, கேள்விகள், ரிப்பீட்
ஆனது, பெற்றோரையும், மாணவர்களையும், அதிர்ச்சி அடைய வைத்தது. பத்தாம்
வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலம்
சந்திப்பில் இருந்து, ரயிலில் ஏற்றியபோது, 157 விடைத்தாள்கள்,
தண்டவாளத்தில் விழுந்து, சின்னாபின்னமானது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு பள்ளியில்,
ஆங்கிலம் முதல்தாள் தேர்வை எழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகளை,
தபால் ஊழியர், பஸ்சில் எடுத்துச் சென்றபோது மாயமானது.
அன்றே சொன்னது தினமலர்: இதுபோன்ற சம்பவங்களால்,
தேர்வுத்துறை, கடும் நெருக்கடிக்கு ஆளானது. இதனால், விடைத்தாள் கட்டுகளை
கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்று நடவடிக்கையை எடுப்பது
குறித்து, தேர்வுதுறை ஆலோசித்து வருகிறது என, கடந்த ஏப்ரல், 3ம் தேதி,
தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது. இந்நிலையில், தேர்வுத்துறையில் உள்ள
பிரச்னைகளை களையவும், தேர்வை, எவ்வித பிரச்னைகளுக்கும் இடமின்றி நடத்தவும்,
பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், தேர்வுத்துறை இயக்குனராக
மாற்றப்பட்டார். இவர், ஏற்கனவே, பல ஆண்டுகள், தேர்வுத் துறையில், இணை
இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பதால், அரசு, இவரை, தேர்வுத்
துறைக்கு மாற்றியது. அரசு எதிர்பார்த்தது போல், தேர்வுத்துறை இயக்குனர்,
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதிப்பெண் பட்டியலில்,
மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இடம்பெறும் சம்பவம், பல
ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், ஏராளமான மாணவர்கள், தேர்வுக்குப்பின்,
தேர்வுத்துறைக்கு படையெடுக்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்க, முழுமையான விவரங்கள் அடங்கிய படிவத்தை, பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு வழங்கி, அவர்களிடம் கையெழுத்து பெற, இயக்குனர் நடவடிக்கை
எடுத்துள்ளார். இந்த படிவத்தில், மாணவர், தலைமை ஆசிரியர், வகுப்பு
ஆசிரியர், பெற்றோர் என, நான்கு தரப்பினரும் கையெழுத்து போட வேண்டும்
எனவும், இயக்குனர் கண்டிப்பாக கூறி உள்ளார்.
இயக்குனர் குழு அமைப்பு: இந்தப் பணிகள்,
பள்ளிகளில், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த
நடவடிக்கையாக, பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், தபால் துறை
மற்றும் ரயில்வே துறையை ஈடுபடுத்தாமல், புதிய திட்டத்தை அமல்படுத்துவது
குறித்து, தேர்வுத்துறை, ஆலோசித்து வருகிறது. இதற்காக, பள்ளிக்கல்வி
இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய குழு,
அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஏற்கனவே ஓரிரு முறை கூடி, ஆலோசனை நடத்தி
உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், பார்சல் லாரிகளை பயன்படுத்தி, விடைத்தாள்
கட்டுகளை, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரும் திட்டம்
அமல்படுத்தப் பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தபோதும், ஏனோ,
கைவிடப்பட்டது.
பொதுத்தேர்வுக்கு முன் முடிவு: தற்போது,
மீண்டும், பார்சல் லாரிகள் மூலம், விடைத்தாள் கட்டுகளை கையாளும் திட்டத்தை
அமல்படுத்தலாமா அல்லது அரசுத் துறை வாகனங்களை பயன்படுத்தலாமா என்பது
குறித்து, இயக்குனர்கள் குழு, தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தில்
உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை
எடுக்க, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. வரும் பொதுத்தேர்வுக்கு முன், இந்த
விவகாரத்தில், முடிவு எடுக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...