தமிழ்நாட்டில் காலாகாலமாக மாதா, பிதா, குரு,
தெய்வம் என்ற வரிசையில்தான், முதலில் தாய்–தந்தை, அடுத்தது ஆசிரியர்கள்,
அதன்பிறகுதான் தெய்வம் என்று வணங்கினர்.
ஒரு மகனை அல்லது மகளை நன்னெறிகளில்
வளர்ப்பதும், ஒளிமிகுந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பதும், அறிவின்
மேன்மையை அவனில், அவளில் பதிப்பதும் ஆசிரியர்களே. போட்டி மிகுந்த
இந்தகாலத்தில், கல்வியின் தரம் சிறந்து விளங்கினால்தான், நல்லதொரு
வேலைவாய்ப்பை பெறமுடியும்.
ஆக, எதிர்கால இந்தியாவின், எதிர்கால
தமிழ்நாட்டின் தலைவிதியே மாணவர்கள் பெறும் கல்வியில்தான் இருக்கிறது.
அதனால்தான், மத்திய–மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு மாணவன் சிறந்து விளங்க
வேண்டுமென்றால், அவனுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அறிவாற்றலில் மிக
உன்னதமான நிலையில் இருக்கவேண்டும். அதை உறுதிபடுத்தும் வகையில்தான், மத்திய
அரசாங்கம் ‘இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை’ கொண்டுவந்துள்ளது. நாடு
முழுவதும் இந்த சட்டம் இப்போது அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தின்கீழ்
2010–ம் ஆண்டு ஆகஸ்டு 23–ந்தேதிக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேருபவர்களும்,
சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியவர்களும் கண்டிப்பாக ஆசிரியர்
தகுதித்தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம்
முதலில் நடந்தது. அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்காக அதாவது, 1–ம் வகுப்பு
முதல் 5–ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு தேர்வும், 6
முதல் 10–ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்களுக்காக மற்றொரு தேர்வும் நடத்தப்பட்டது. இந்த இரு தேர்வுகளையும்
சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில்,
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து 60 சதவீத மதிப்பெண்கள்
பெற்றவர்களே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவார்கள். ஆனால், இந்த தேர்வில்
இடைநிலை ஆசிரியர்கள் 1,735 பேர்களும், பட்டதாரி ஆசிரியர்கள் 713 பேர்களும்
மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீண்டும் அக்டோபர் மாதம் இந்த தேர்வுகள்
நடந்தன. தேர்வு எழுதும் நேரத்தை 1½ மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக
உயர்த்தி ஓரளவு எளிதான கேள்விகள் கேட்கப்பட்டாலும், இதிலும் தேர்ச்சி
விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில்
10,397 பேர்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் 8,849 பேர்களும்
தேர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்ச்சி விகிதம் பெரிய
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது 3–வது முறையாக இந்த தேர்வு நடந்தது.
மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் இந்த ஆசிரியர்கள் தகுதித்தேர்வை
எழுதியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதிதேர்வில் எந்தவித முறைகேடும்
ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இருக்கும் சமுதாயத்துக்கு,
தமிழ்நாட்டில் சில இடங்களில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியே
வந்துவிட்டதாக வந்த தகவல் மிகுந்த கவலையை அளித்துள்ளது. இதுபற்றி
கல்வித்துறை முழுமையாக விசாரிக்கவேண்டும். அப்படி உண்மையிலேயே
வினாத்தாள்கள் வெளியாகி இருந்தால் எந்த அளவுக்கு, அது எந்தெந்த இடங்களில்
வெளியாகி இருக்கிறது? அப்படியானால், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
என்று முடிவு எடுக்க வேண்டும்.
இந்த தேர்வு முடிவில், இதுவரை நடந்த தேர்வு
முடிவுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் தேர்வு பெற்றதுபோல
இல்லாமல், கூடுதலாக தேர்வுபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு கடினமான தேர்வுகளில் வெற்றிபெறும் மிகத்திறமையானவர்கள்தான்
எதிர்காலத்தில் ஆசிரியர்களாக இருப்பார்கள் என மாணவர்களும், பெற்றோர்களும்
மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், இவ்வளவு குறைவான அளவில் ஆசிரியர்கள் தேர்வு
பெற்றுக்கொண்டிருந்தால், எதிர்காலத்தில் ஆசிரியர் பதவிக்கான இடங்களை
எப்படி நிரப்ப முடியும்? என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, ஆசிரியர் பயிற்சி
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் சேருவதற்கான மதிப்பெண் தகுதியை
உயர்த்தவும், அங்கு பாடத்திட்டங்களை இன்னும் உயர்தரத்தில் கொண்டுவரவும்
அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
nice
ReplyDeleteYes sir l know somebody got pg trb question paper before exam in tiruchy dist, they also given question paper for tntet
ReplyDelete