தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள ஆசிரியர்களுக்காக மாதத்தின் முதல் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்த
தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் அவர்
கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி
தொடக்க கல்வி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம்
ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் தங்களது பணி மற்றும் பண பலன் சார்ந்த
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரில் அளிக்கலாம்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்களே உரிய நடவடிக்கை
எடுக்க கூடியதாக இருப்பின், உடனே ஆணை பிறப்பிக்கலாம். மாவட்ட தொடக்க கல்வி
அலுவலரால் வழங்கப்பட வேண்டிய ஆணைக்கான விண்ணப்பங்களை பரிந்துரை செய்து
அனுப்ப வேண்டும். மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர்கள் இதுபோன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். முதன்
சனிக்கிழமை அன்று பெறப்பட்ட விண்ணப்பங்களில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரால்
ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து
அன்றே ஆணை பிறப்பிக்கப்படும்.
முதல் மற்றும் 2 வது சனிக்கிழமைகளில் நடைபெறும்
சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எவையேனும்
முறையற்றதாகவும், சரியானதாகவும் இல்லாவிட்டால் அவற்றை சம்பந்தப்பட்ட
ஆசிரியர்களிடமே சுட்டிக்காட்டி சரிபார்க்கும் படிவம் இணைத்து திருப்பி
அளித்திட வேண்டும்.
முகாம் சார்பாக தனி பதிவேடு பராமரித்து ஒவ்வொரு
மாதமும் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும்,
அவர்கள் தொடக்க கல்வி இயக்ககத்திற்கும் அறிக்கை அளித்திட வேண்டும்.
மூன்றாவது சனிக்கிழமை தொடக்க கல்வி இயக்ககத்தில் நடைபெறும் சிறப்பு
குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட
மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...