தமிழக கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில்
உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வருகிறார்களா
என்பதை கண்காணிக்க புதிய குழு ஒன்றை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில், தொலை தூரக் கிராமங்களிலும்,
மலைப்பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒழுங்காக
பள்ளிக்கு வருவதில்லை'. மேலும், 'விடுமுறை எடுத்தால் விடுமுறை
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதில்லை' என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள்
இருந்து வருகிறது.
இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த பிரச்னை தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா
மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள்
குழுவினர்
விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக, நேற்று (30ஆம் தேதி) தொடக்ககல்வி
இயக்குனர் இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகளுக்கு
அனுப்பியுள்ள அறிக்கையில், ''கிராமப்புறம் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள
அரசு பள்ளிகளில் தினமும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள், விடுமுறை
எடுத்து விட்டு விடுமுறை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காத ஆசிரியர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
எனவே ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து
பள்ளிகளில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வருகிறார்களா?, விடுமுறை கடிதம்
கொடுக்காமல் விடுப்பு எடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வட்டார அளவில்
கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு
மாவட்டத்திலும் தொலை தூரத்தில் உள்ள பள்ளி மற்றும் பஸ் வசதி இல்லாத
பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, வாரத்தில் இரு நாட்கள் மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்
ஆகியோர் இணைந்து அந்த பள்ளியில் அதிரடி சோதனை நடத்தி ஆசிரியர்கள் பணிக்கு
வந்திருக்கிறார்களா?, விடுமுறை எடுத்திருந்தால் விடுப்பு கடிதம்
கொடுத்திருக்கிறார்களா? என்பதை கண்காணித்து மாதம் தோறும் தொடக்கக்கல்வி
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...