Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., விடையை ஆட்சேபித்து 2,000 பேர் விண்ணப்பம்


            டி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000 தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, பாட வாரியான நிபுணர் குழு, தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.
 
          இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிட டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது.

            போட்டித் தேர்வு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள் அதுகுறித்து, உரிய சான்றுகளுடன் ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

            அதன்படி, 1,000 க்கும் மேற்பட்டோர், ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது பாட வாரியான நிபுணர் குழு முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த முடிவுகளுக்கு டி.ஆர்.பி., போர்டு ஒப்புதல் அளித்ததும், இந்த வார இறுதிக்குள் இறுதி விடைகள் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரத்தில், தேர்வு செய்யப்பட்ட, 2,881 பேரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

           தேர்வு செய்யப்படும் புதிய ஆசிரியர், இம்மாத இறுதிக்குள்ளாகவே பணி நியமனம் செய்யப்படுவர். வட மாவட்டங்களில், அதிகளவு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைவரும் தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.

                    2,000 பேர் ஆட்சேபனை: கடந்த ஆக., 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதிக்கான, டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, 6.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்து, 2,000 பேர், ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக, டிஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

              இதுகுறித்து டி.ஆர்.பி., வட்டாரம் மேலும் கூறியதாவது: பெற்றுள்ள விண்ணப்பங்களில் பெரும்பாலும் தமிழ்ப் பாட விடைகள் மீதுதான் ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பல விடைகள், எங்களுக்கே குழப்பமாக உள்ளன. குறிப்பாக, குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கேள்வி. இதற்கு, 6ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், 8ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு புத்தகங்களையும், பாடநூல் கழகம் வெளியிட்டு உள்ளது.

                   நிபுணர் குழு, 17ம் நூற்றாண்டுதான் சரி என தெரிவித்து உள்ளது. பாடநூல் கழகம், தவறான தகவலை வெளியிட்டு உள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதுபோல், பல தவறுகள் உள்ளன. அவற்றை, பாட வாரியான நிபுணர் குழு ஆய்வுசெய்து வருகிறது. ஒரு பாடத்திற்கான விடைகளை, மூன்று ஆசிரியர் குழு, ஆய்வு செய்கிறது. அதன்படி டி.இ.டி., முதல் தாள் தேர்வு விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது, முழுமையாக ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கப்பட்டதும், இறுதி விடைகள் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

                தற்காலிக விடை - இறுதி விடை எதற்காக?: பாடத்திட்டங்களின் அடிப்படையில், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து, கேள்விகளும், விடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்கள்தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. இதில், ஏதாவது சில கேள்விகளுக்கான விடைகள், தவறாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி அமைந்திருந்தால், அதைப் பற்றி, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும்போது, அது குறித்து ஆய்வு செய்து, தவறான விடைக்குரிய மதிப்பெண்களை வழங்குகிறது அல்லது சம்பந்தபட்ட கேள்வியை நீக்கி, மீதமுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, முடிவை வெளியிடுகிறது.

              ஆட்சேபனைகளுக்குப் பின், இறுதி விடைகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதன்பிறகே, பணி நியமனத்திற்கான தேர்வுப் பட்டியல் தயாராகிறது. தேர்வர்கள் பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில், தற்காலிக விடை, இறுதி விடை என்ற முறையை, டி.ஆர்.பி., கையாள்கிறது. இதே முறையை, டி.என்.பி.எஸ்.சி.,யும் கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




1 Comments:

  1. when final key for tet will be published?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive