ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்களில், சலுகை வழங்கக் கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகளில் பணியாற்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர் சம்மேளனத்தின் நிறுவனர் கருப்பையா என்பவர், தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற, ஒருவர், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, தகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்கலாம்.
தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, ஆந்திராவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தகுதி மதிப்பெண், 40 சதவீதம்; ஒடிசாவில், 50 சதவீதம்; உத்தர பிரதேசத்தில், 55 சதவீதம்; மணிப்பூரில், 50 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தான், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என, இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்ணில், சலுகை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, கடந்த, மே மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், இடஒதுக்கீட்டில் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்களில் எந்த சலுகையும் வழங்கவில்லை. அவர்களுக்கு சலுகை வழங்கக் கோரி, கடந்த, ஏப்ரல் மாதம் மனுக்கள் அனுப்பினேன்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள, தகுதித் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு, தடை விதிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் வருவோருக்கு, தகுதி மதிப்பெண்ணில் சலுகை வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி(பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, கல்வித்துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டனர். விசாரணை, செப்., 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...