"பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில், சமைத்த உணவை சாப்பிட்ட பள்ளி மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், பள்ளி, விடுதியில் சமைக்கப்படும் உணவை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சாப்பிட்டு பார்த்த பின்னரே, மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.
அதையடுத்து, பள்ளி சத்துணவுக் கூடத்தில் சமைக்கப்படும் உணவுகளை, அதன் தலைமை ஆசிரியர்கள் சாப்பிட்டு சோதனை செய்த பின், மாணவ, மாணவியர் சாப்பிட அனுமதிக்கின்றனர். அதுபோல், உணவுகளும், சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வு குறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, மாநில அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு, தாமதமாக தகவல் கிடைக்கிறது. அதனால், உரிய நேரத்தில், நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, ஓர் உத்தரவை பிறப்பித்து உள்ளது.
கல்வி சுற்றுலா, என்.எஸ்.எஸ்., முகாம் அழைத்துச் செல்லுதல், பள்ளி வகுப்பறை இடிந்து விழுதல், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளிடம் நிலவும் முரண்பாடான செயல்பாடு, போன்ற எதிர்மறையான சம்பவங்களை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர், தெரிவிக்க வேண்டும்.
அவர், பள்ளிக்கல்வி இயக்குனர்களுக்கு தெரிவிப்பார் என, உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உத்தரவில், கல்வித் துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...