தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆர்.கோம்பை அரசு நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பிரடெரிக் எங்கல்ஸ் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் எனது ஊதியத்தில் 10-சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. 1.4.2006-ல் எனது பணி வரன்முறைப்படுத்தப்பட்டது. இதுவரையில் ரூ.46,830 பிடித்தம் செய்துள்ளனர்.
அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் விவரம் பெற்றேன்.
அதில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஓய்வூதியத் திட்டமே இல்லை என்பது தெரியவந்தது. ஏனெனில், ஏற்கெனவே இருந்த ஓய்வூதியத் திட்ட பலன்கள் எதுவும் இதில் கிடைக்காது.
1978-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த அரசுப் பணி விதிகள் (ஓய்வூதியம்) சட்டத்தின் விதி 2 மற்றும் தமிழ்நாடு பொது வருங்கால வைப்பு நிதி விதி 4 ன் 3 -வது துணை விதி ஆகியவை திருத்தப்பட்டு, இந்தப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 2003 ஆகஸ்ட் 6-ல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஊழியரின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு ஈடான தொகை அரசின் பங்களிப்பாகச் செலுத்தப்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் 31.3.2003-க்கு முன்னதாகப் பணிபுரிந்த ஊழியர்களுக்குக் கிடக்கும் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் அதற்கு மறுநாள் முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
இது ஊழியர்களைப் பாகுபாடு செய்வதாகும். மேலும், ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
ஒய்வூதியப் பலன் என்பதில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி ஆகிய முக்கிய பணப்பலன்கள் அடங்கியதாகும். இது ஊழியரின் சேவைக்கு ஈடாக வழங்கப்படுவதாகும்.
ஓய்வுக்குப் பிறகு ஊழியர் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரும் அவதிப்படக் கூடாது என்பதற்காக சமூகப் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பலன்களை அடியோடு மறுப்பதை ஏற்க முடியாது.
புதிய திட்டத்தில் பணம் திரும்பக் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்கப்படவில்லை.
எனவே, புதிய ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 259-ஐ செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக அரசின் நிதித் துறை (ஓய்வூதியத் துறை) செயலர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
very good appeal
ReplyDelete