பிளஸ் 2 தேர்வில், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில், மாணவர்கள் அதிகளவில், தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முக்கிய பாடங்களில் தோல்வி : ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களில், மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைவதை, கல்வித்துறை கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர் குழு மூலம், முதுகலை ஆசிரியர்களுக்கு, டி.பி.ஐ., வளாகத்தில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில், தோல்வி அதிகமாக உள்ளது. இந்த பாடங்களுடன், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களை எடுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம், 30ம் தேதி முதல், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஒரு மாவட்டத்திற்கு, இரண்டு பேராசிரியர்கள், இரண்டு முதுகலை ஆசிரியர்கள், ஒரு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் என, ஐந்து பேருக்கு, பாடத்திட்டங்களை எழுதிய ஆசிரியர் குழுவினர், பயிற்சி அளிப்பர். பாடத்திட்ட குழுவினர் பாடங்களில், கடினமான பகுதி எது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்வுகளில், அந்த பகுதியில் இருந்து, எந்தெந்த வகையில் கேள்விகள் வரலாம், அதற்கு, எந்த வகையில் பதிலளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகளை, பாடத்திட்ட குழுவினர் விளக்குகின்றனர்.
மாவட்டத்திற்கு, ஐந்து பேர் வீதம், 160 பேர், பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். ஆக., 15ம் தேதி வரை, தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. அதன்பின், இந்த ஐவர் குழு, மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும். இது, தோல்வி சதவீதத்தை, கணிசமாக குறைக்க, கை கொடுக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...