குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சி.இ.ஓ. நடத்திய அதிரடி ரெய்டில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய பிளஸ் 2 மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
பள்ளி மாணவர்களிடையே செல்போன், மெமரி கார்டு மோகம் பரவலாக இருந்து வருகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்துவதை விடுத்து பள்ளிகளில் வகுப்பறை வரை கொண்டு வந்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருவது ஆரோக்கியமற்றதாக உள்ளது. தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளையும் மாணவர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
மணிக்கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களிடம் செல்போன்கள் 4, அவற்றில் பயன்படுத்திய மெமரி கார்டுகள், சென்ட் பாட்டில்கள், தனியாக வைத்திருந்த சிம் கார்டுகள், பிரேஸ்லெட், பெரிய பக்கிள்சுடன் கூடிய பெல்டுக்கள், வெளிநாட்டு, மற்றும் கோல்டு வாட்சுகள், போதை பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், நவீனநாகரீக சீப்புகள் போன்றவை மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல் சில மாணவர்களின் முடி அலங்காரம் சினிமா நடிகர்கள் பாணியில் வளர்த்தும், மோசமான தோற்றத்தில் டை அடித்து மாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சி.இ.ஓ. அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி தவறான பாதையில் செல்லவைக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பள்ளிகளில் நடத்திய திடீர் ரெய்டு குறித்து சி.இ.ஓ. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது;
ஒழுக்கமுள்ள பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்கவேண்டும். ஆசிரியர்களின் கடமை கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவதோடு, ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தும்போது அவர்களையும் திருத்தமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும். ஒழுக்கமும், பண்பும் உள்ள மாணவர்கள் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் மிகச்சிறந்த மனிதர்களாக திகழமுடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
அவர்களின் ஒழுக்கமே பள்ளியின் நிறை, குறைகளுக்கெல்லாம் காரணமாக அமைகிறது. மாணவன் ஒழுக்கம் உள்ளவரா என்பதை அவனது நடத்தை, புறத்தோற்றம், உடல்மொழி போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பள்ளிகளில் ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற தவிப்பு ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பள்ளியும், மாணவர்களும் சிறந்த மதிப்பு மிக்கவர்களாக உயர்வர்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளும் அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே முக்கியமான பள்ளி பருவத்தில் உபயோகிக்கக்கூடாத பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்றார்.
முதற்கட்டமாக குமரி மாவட்டத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் நடத்தப்பட்ட திடீர் ரெய்டால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தில் உள்ள பரவலான பள்ளிகளில் மாணவர்கள் போதைபாக்கு, செல்போன், மற்றும் நவநாகரீக பொருட்கள் கொண்டுவரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிகளில் நடத்தப்பட்ட இந்த ஆரோக்கியமான ரெய்டை பரவலான மக்கள் பாராட்டியுள்ளனர்.
பள்ளி மாணவர்களிடம் நடத்திய ரெய்டின்போது பல நடிகைகளின் போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அவர்கள் பேண்ட், மற்றும் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த யூனிபார்முடன் கூடிய பல மாணவிகளின் போட்டோவை பார்த்து சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களிடம் அறிவுரை கூறியதுடன் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டாம் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
போதை பாக்குகள் வைத்திருந்த மாணவர்களிடம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது. பள்ளி அருகாமையில் இருக்கும் கடைகளில் போதை பாக்குகள் ரகசியமாக விற்கப்படுகின்றனவா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடமும் படிக்கும் காலத்தில் செல்போன், மற்றும் ஆடம்பர பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாட்ச், செல்போன் போன்ற பொருட்களை மாணவர்களிடம் பள்ளிகளுக்கு எடுத்து வரவேண்டாம் என அறிவுறை கூறி திருப்பி கொடுக்கப்பட உள்ளது.
பெற்றோர்களுக்கு வீடுதேடி வருகிறது கவுன்சிலிங்
குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற நடைமுறைகளைகளையும் பொருட்டு பள்ளிகள் அனைத்திலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் கவுன்சிலிங் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது மாணவர்களின் மோசமான நடத்தை அதிகம் உள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அப்பள்ளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. வாரம் ஒருமுறை திடீரென பள்ளிகளில் ரெய்டு நடத்தப்படும். மதிப்புக்கல்வி, ஒழுக்க நெறிக்கல்வி பள்ளிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
ஆசிரியர்களின் கைகளைக் கட்டிவிட்டு வாயைத் தைத்துவிட்டு மாணவர்களிடம் ஒழுக்ககத்தை எதிர்பார்கிறது கல்வித்துறை. செல்போன் பயன்படுத்திய மாணவியை கண்டித்த ஆசிரியை சிறையில்! ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்துவதாகும்.
ReplyDeleteவகுப்பில் இருக்கும் ஒரு சில திமிர் பிடித்த மாணவர்கள் தங்களுக்கு ஜால்ரா போடமறுக்கும் மற்ற மாணவர்களது பொருட்களை திருடிக்கொள்ளுதல், நன்றாகப் படிக்கும் மாணவர்களை மிரட்டுதல்,அவர்களின் புத்தகங்களை கிழித்தல், காணாமல் ஆக்குதல்,போன்ற செயல்களால் வகுப்பறையில் அமைதி குலைகிறது. இம்மாணவர்களே பிற்காலத்தில் ரவுடிகளாக உருவாகின்றனர். இம்மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் தலைமைஆசிரியருக்கும் கட்டுப்படுவது இல்லை.மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருதல், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தல் ,பள்ளியில் செல்பேசிகளில் பலான படங்களை பார்த்தல், போன்ற காரியங்களால் பள்ளியில் ஒழுக்கம் கெட்டுப்போகின்றது. இந்த ஒரு சில மாணவர்களால் பெரும்பான்மையான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. சில நல்ல மாணவர்களும் இம்மாதிரியானவர்களுடன் சேர்ந்து கெட்டுப்போகின்றார்கள். வயலில் களைகள் இருப்பதுபோல சமூகத்தில் சமூக விரோதிகள் இருப்பது இயற்கை. இதில் பள்ளி மட்டும் விதிவிலக்கா? பள்ளி சமூகத்தின் சிறு அங்க்கம் தானே; களைகளிடம் இருந்து பயிர்களைக்காப்பதை விட்டு விட்டு பயிர்களைப்பற்றி கவலைப்படாமல் களைகளைப் ப்ற்றி கவலைப்படுவதால் எதிர்கால சமூகம் சீரழிவுக்குள்ளாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் எதிரிகள் என்பது போன்ற மாயை ஏற்படுத்தும் ஊடகங்கள் தங்கள் கடமையை உணர்ந்து நடக்க வேண்டும். பள்ளிகளில் ஒழுக்கம் இல்லை எனில் எதிர் காலத்தில் அதிகமாக காவல் நிலையங்களைத் திறக்க வேண்டியது இருக்கும்
ReplyDelete