நேர்மையாக பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசியல் காரணங்களுக்காக, "சஸ்பெண்ட்' செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வதை தடை செய்யும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி., மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், துணை கலெக்டராக பணியாற்றிய, துர்கா சக்தி நக்பால் என்ற, இளம் பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரை, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, "விதிமுறைகளை பின்பற்றாமல், வழிபாட்டு தலத்தை இடித்ததால் தான், துர்கா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்' என, உ.பி., மாநில அரசு விளக்கம் அளித்தது. இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, மத்திய அரசும், இதில் தலையிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, உ.பி., மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்த பிரச்னையால், காங்கிரசுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
மாற்றம் வருமா?
நேர்மையாக பணியாற்றும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சில மாநிலங்களில் அரசியல் மற்றும் சுய நலனுக்காக, சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் அல்லது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். சமீபகாலமாக, இது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான அதிகாரிகள், எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல், பணியாற்றுவதை உறுதி செய்யும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த திருத்தம், நடைமுறைக்கு வந்தால், ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கும், இது பொருந்தும். இது தொடர்பாக, உள்துறை, சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
"இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!' சீறுகிறார் உ.பி., அமைச்சர் :
சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான, அசம் கான் கூறியதாவது:சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவை, கடவுள் துர்க்கை போல், பத்திரிகைகளும், "டிவி' சேனல்களும், புகழ் மாலை சூட்டுகின்றன. இதற்கு முன்னும், ஏராளமான அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத பத்திரிகைகள், இப்போது மட்டும், பரபரப்பாக செய்திகள் வெளியிடுகின்றன. நம் நாட்டில், 125 கோடி பேர் உள்ளனர். இவர்களால், நிர்வாகத்தை நடத்த முடியாதா? நிர்வாகம் நடத்துவதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேவையா?இவ்வாறு, அசம் கான் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...