மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களை போன்று சரளமாக ஆங்கிலம் பேச தயங்குகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்ள, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர் புராஜெக்ட் 100' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
டில்லி மற்றும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 100 பள்ளிகள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஏழு பள்ளிகளிலும், கோவை மாநகராட்சியில் 13 பள்ளிகளிலும் "இங்கிலீஷ் ஹெல்பர்' திட்டம் துவங்கப்படுகிறது. கோவையில், ஒப்பணக்கார வீதி (பெண்கள்), ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, ராமகிருஷ்ணாபுரம்,
பீளமேடு, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், செல்வபுரம் (பெண்கள்), கே.கே.புதூர், ராமலிங்கம்காலனி, கோவில்மேடு, புலியகுளம், வரதராஜபுரம், அனுப்பர்பாளையம் ஆகிய உயர்நிலைப்பள்ளிகளிலும், "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு துவங்கப்படுகிறது. பள்ளியில் 6 - 8ம் வகுப்புக்கான ஆங்கில பாடம் "சாப்ட்வேர்' மூலம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பாடம் நடத்துவது போன்று, "ஆடியோ விஷுவல்' முறையில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். ஆனால், "இங்கிலீஷ் ஹெல்பர் சாப்ட்வேர்' மூலம் பாடத்திலுள்ள சந்தேகங்கள் நீங்கும் வரையிலும், பாடம் கற்கலாம். இதற்காக "ஹெட் போன்' வழங்கப்படுகிறது. பாடத்தில் சந்தேகம் ஏற்படும் இடத்தில், கம்ப்யூட்டரில் தேர்வு செய்தால், எதிர்சொல், இணைச்சொல், பொருள் போன்றவற்றை காண முடியும். பாடத்தை பார்ப்பதை போன்று, "ஹெட் போன்' உதவியுடன் கேட்கவும், முடியும். இத்திட்டத்தால், ஆங்கில பாடத்தில் தவறுகள் ஏற்படாது; அர்த்தம் புரியாத வார்த்தைகளை உடனுக்குடன் தெரிந்து படிக்கலாம்; ஆங்கில பேச்சு திறன் மேம்படும். மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட
ஆசிரியர்களுக்கு "இங்கிலீஷ் ஹெல்பர்' பயிற்சி கொடுத்து, அதன்பின், மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது.
"அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' நிர்வாகி அலெக்ஸாண்டர் கூறுகையில், ""கோவை மாநகராட்சியில் 13 பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு படிக்கும் 2424 மாணவர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்' மூலம் ஆங்கிலப்பாடம் போதிக்கப்படும். இதற்காக, 26 ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) பயிற்சி வகுப்பு நடக்கிறது. பள்ளிகளுக்கு தலா ஐந்து கம்ப்யூட்டர்கள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் மூன்று வகுப்புகள் இங்கிலீஷ் ஹெல்பர் வாயிலாக கற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில திறன் மேம்படும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...