ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் பணிக்கு செல்லவேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 6 லட்சத்து 45 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எப்படி நடத்தவேண்டும் என்பது குறித்து தேர்வை மைய தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை இஞ்ஞாசியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஜெயகண்ணு தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
செல்போன் ஆசிரியர் தகுதி தேர்வை எந்தவித சிறு சறுக்கலும் இல்லாமல் சிறப்பான முறையில் நடத்தவேண்டும். தென்மாவட்டத்தில் தான் அதிக அளவில் ஆசிரியர்கள் உள்ளனர். நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களாக உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளர் முந்தைய நாளில் சென்று அங்கு மின்சாரவசதி, குடிநீர்வசதி, கழிப்பிட வசதி எல்லாம் உள்ளதா என்று சரி பார்த்து கொள்ளவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தரை தளத்தில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்.
தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், நவீன வகை வாட்ச் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. செல்போன் உள்ளிட்ட உயர்ரக பொருட்களை டோக்கன் வழங்கி பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். ஹால் டிக்கெட் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காலை 10–15 மணிக்கு பிறகு மையத்திற்கு வருகிறவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. ஒரு நபர் இரண்டு தேர்வையும் எழுதுவார்கள் அவர்களுக்கு 2 ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.
முதல் நாளில் 2–வது நாளுக்கு உரிய தேர்வுக்கு உரிய ஹால் டிக்கெட்டை எடுத்து வந்தால் அவரை தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. வினா தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அது தேர்வு எழுதுகிறவர்கள் முன்னிலையில் தான் உடைக்கப்படவேண்டும். தேர்வு கண்காணிப்பாளர்கள் காலை 8 மணிக்கு மையத்தில் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பத்மா, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...