அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தொலைதூரக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதியை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வகையில் அவர்களின் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம். (ஒரு ஊக்க ஊதியம் என்பது 2 இன்கிரிமென்ட் ஆகும்).
உதாரணத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தால் ஒரு ஊக்கத்தொகையும், பி.எட். முடித்தால் இன்னொரு ஊக்கத்தொகையும் பெறலாம். அதாவது அந்த ஆசிரியருக்கு 4 இன்கிரிமென்ட்டுகள் வழங்கப்படும். ஒரு இன்கிரிமென்ட் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் (கிரேடு பே) 3 சதவீதத்தை குறிக்கும்.
விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை
இதேபோல் பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் பெற்றால் இதேபோல் 2 ஊக்க ஊதியங்களை பெறுவார். அண்மையில் அவர்களுக்கு எம்.பில். பி.எச்டி. படிப்புகளுக்கும் ஊக்க ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டது. நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு 50 சதவீத அடிப்படை சம்பளமும், முழு அகவிலைப்படியும் சம்பளமாக வழங்கப்படும்
இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பட்டப்படிப்போ, பட்ட மேற்படிப்போ, பி.எட். படிப்போ படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொலைதூரக்கல்வி படிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த காலங்களை விடுமுறை விடுப்பு நீங்கலாக, அவர்களின் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலின் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும் அந்த விடுப்புகள் போக மீதி நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அனுமதியானது அரசாணை வெளியிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில் (22.7.2013) நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படிக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கி அவர்கள் நேரடி சேர்க்கை மூலம் படிக்க செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...