தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு, நேற்று, எவ்வித குளறுபடியும் இன்றி, நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. முதல் தேர்வில், 2,400 பேரும், இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றனர். மூன்றாவது டி.இ.டி., தேர்வுகள், நேற்று துவங்கின. அரசு பள்ளிகளில் மட்டும், 15 ஆயிரம் ஆசிரியர், நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், சட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களும், அதிகளவில், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
முதலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு, நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. தமிழகத்தில், 687 மையங்களில், 2,68,429 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வுகள் நடந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 326 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 15 பேர் வரவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்கள், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
தேர்வர்கள் கருத்து:
சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், "கடந்த இரு தேர்வுகளில், 70, 75 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. இதனால், தேர்ச்சி பெற்றுவிடுவேன். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட சில கேள்விகள் கடினமாக இருந்தன. எனினும், பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை," என்றார்.
போரூரைச் சேர்ந்த நிவேதா கூறுகையில், "நான், ஆசிரியர் பயிற்சி முடித்த கையோடு, முதல் முறையாக, தேர்வை எழுதி உள்ளேன். மிகவும் பயத்துடன், தேர்வுக்கு வந்தேன். ஆனால், பெரிய அளவிற்கு, கடினமாக இல்லை. கேள்விகள் அனைத்தும், எளிதாக இருந்தன," என்றார்.
தேர்வு, எளிதாக இருந்ததாக, பெரும்பாலான தேர்வர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி.இ.டி., தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இன்று நடக்கும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வும் எளிதாக அமைந்தால், தேர்ச்சி, 10 சதவீதத்தை தாண்டலாம்.
கடந்த தேர்வுகளில், "ஆப்சென்ட்" சதவீதம், 10க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்றைய தேர்வில், வெறும், 2.18 சதவீதம் பேர் மட்டுமே, "ஆப்சென்ட்" ஆனதாக, டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த அளவில் 5,854 பேர் மட்டும் தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட அளவில் பார்த்தால், சென்னை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 465 பேர், "ஆப்சென்ட்" (4.47 சதவீதம்) ஆகியுள்ளனர். குறைந்தபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில், 1.46 சதவீதம் பேர், "ஆப்சென்ட்". தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் தேர்வர்களிடையே அதிகமாக இருப்பது தான், "ஆப்சென்ட்" குறைவுக்கு காரணம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...