"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.
சென்னை துறைமுக குடியிருப்பைச் சேர்ந்த, எண்ணூர் துறைமுக அதிகாரி ஹரிஹரனின் மகன், மூன்றரை வயது சூர்யா, கடந்த சில தினங்களுக்கு முன் கடத்தப்பட்டான். இந்த சம்பவத்தில், வாகன ஓட்டுனர் உட்பட, நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.இந்த கடத்தல் சம்பவத்தில், தலைமறைவாக உள்ள நபர், பள்ளி நேரம் முடியும் முன்பே, பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்துச் சென்றது தெரிந்தது. இந்த விவகாரத்தில், பள்ளியின் அலட்சியமே காரணம் என்று, போலீசார் குற்றம் சாட்டினர். பள்ளி நிர்வாகம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்து பேசி முடிவெடுக்க, சென்னை போலீஸ் முடிவெடுத்தது. தொடர்ந்து, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, பள்ளிகளுக்கு, கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.தொடர்ந்து, நேற்று மாலை போலீசார், பள்ளி நிர்வாகத்தினர், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 211 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் தரப்பில், சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர்கள், தாமரைக்கண்ணன், ராஜேஷ் தாஸ், கிழக்கு மண்டல இணை கமிஷனர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
* பெற்றோர் - ஆசிரியர் கழகத்துடன் இணைந்து, பள்ளிகளின் நிர்வாகங்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும், அழைத்துச் செல்லும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், சரியானவர்களா என்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.அவர்களது நன்னடத்தை, நம்பகத் தன்மை குறித்து, அவர்களது பின்னணி குறித்து ஆய்வு செய்து, அறிந்து கொள்ள வேண்டும்.
* பள்ளி வளாகத்திற்குள், அங்கீகாரம் பெற்றவர்கள் தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனரா என்பதை உறுதி செய்யும் வகையில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வருவோரை, சோதனை செய்யும் வகையில், வாயிற்பகுதியில் முறையான, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* பள்ளி நேரத்திற்கு முன்பும், பின்னும், குழந்தைகளை அழைப்பதற்கும், வீட்டிற்கு அனுப்புவதற்கும், பள்ளியில் முறையான அமைப்பு இருக்க வேண்டும். பள்ளியில் குழந்தைகளை விடவும், அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நபர், குழந்தை மற்றும் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளியில் இருந்து குழந்தைகளை அனுப்பும் போதும், அழைக்கும் போதும், முறையான சோதனை நடத்த, ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியைகளை நியமிக்க வேண்டும்.
* அனைத்து பள்ளிகளிலும், தேவையான அளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பாக, பள்ளி வாயில்கள், குழந்தைகள் அழைக்கப்படும் மற்றும் அனுப்பப்படும் இடங்களை, கண்காணிப்பதாக இருக்க வேண்டும். பலமுனை கண்காணிப்பு கேமராக்கள், இதற்கு பயன்படுத்தலாம்.
* இது போன்ற பாதுகாப்பு விஷயங்களில், பள்ளிகளுக்கு அனைத்து வகையிலும் போலீஸ் உதவி செய்யும்.இந்த, ஐந்து அறிவுறுத்தல்களையும், சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...