ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம், 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல், மத்திய அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011, பிப்., 11ம் தேதி, ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "தகுதித் தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோருக்கு, அந்தந்த மாநில அரசு சலுகை வழங்கலாம்” என கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், ஆந்திரா, அசாம், கேரளா உள்ளிட்ட, 11 மாநில அரசுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் வரை, தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கி உள்ளது. ஆனால், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சலுகைகள் வழங்கவில்லை.
தேசிய கல்வி கவுன்சில் சலுகை வழங்கலாம் என, பிறப்பித்த அறிவிக்கையை பின்பற்றாமல், "தேர்வு எழுதுபவர்கள், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும்” என கூறியுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
சில மாநிலங்களைப் போல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வில் சலுகைகள் வழங்கவில்லை என்றால், அரசு பணி நியமனத்தில், இடஒதுக்கீட்டு முறையில், மிகப் பெரிய குளறுபடி ஏற்படும். எனவே, சலுகைகள் வழங்காமல், நடத்தப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கையின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டு சலுகைகளை அறிவித்து, ஆசிரியர் தகுதித் தேர்வை புதிதாக நடத்தும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தகுதித் தேர்வு கடந்த, 17, 18ம் தேதிகளில் நடந்து முடிந்துவிட்டது. எனவே, இந்தத் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், அவரே வாதாடினார். அரசு சார்பில் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய்காந்தி ஆகியோர் வாதாடினர்.
இதையடுத்து நீதிபதிகள், "ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த மாதம், 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அந்த வழக்குடன், இந்த வழக்கும், அடுத்த மாதம், 17ம் தேதி விசாரிக்கப்படும்” என உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...