Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை


                  மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
                   கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, முதல் டி.இ.டி., தேர்வை 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும் 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது, முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்) 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்) 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றது, தேர்வர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
                   கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும் தான், தேர்ச்சி குறைவுக்கு காரணம் என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர். பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், கடந்த ஆண்டு, அக்டோபர், 14ல் நடந்த டி.இ.டி., மறுதேர்வுக்கு, ஒன்றரை மணி நேரத்தை, மூன்று மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது.
               இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது. அதைப்போலவே, அந்த தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10, 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்த 19, 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.
               இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2,67,957 பேரும், நாளைய தேர்வை, 4,11,635 பேரும் எழுதுகின்றனர். இன்றைய தேர்வு, 677 மையங்களிலும், நாளைய தேர்வு 1,060 மையங்களிலும் நடக்கின்றன.
               முதல் தேர்வை விட, இரண்டாவதாக நடந்த தேர்வில், டி.ஆர்.பி., எதிர்பார்த்ததைப் போல், தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இன்றும், நாளையும் நடக்கும் மூன்றாவது தேர்வில், 4 சதவீதம் வரை, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.
             இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: "முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள், தேர்வு எப்படி இருக்குமோ என, பதட்டப்பட்டனர். கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், நேரம் குறைவாக இருந்ததும், தேர்ச்சியை குறைத்துவிட்டது. முதல் தேர்வில் கிடைத்த அனுபவம் காரணமாக, கேள்விகள் எப்படி வரும் என்பதை, தேர்வர்கள், நன்றாக புரிந்துகொண்டனர். இதனால், இரண்டாவது தேர்வில், தேர்ச்சி அதிகரித்தது.
               இரு தேர்வுகளை எழுதியவர்கள் தான், மூன்றாவது தேர்வையும், அதிகளவில் எழுதுகின்றனர். புதிதாக தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். எனவே, இரு தேர்வுகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், தேர்வை, நன்றாக எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம். கேள்வி அமைப்புகளும், தேர்வர்களை, மிரட்டும் வகையில் இருக்காது. இரண்டாவது தேர்வில், கேள்விகள் எப்படி அமைந்தனவோ, அப்படித்தான், இந்த முறையும் இருக்கும். எனவே, 50 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறலாம் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
               டி.இ.டி., தேர்வு முடிவை, தனியார் பள்ளிகள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. எட்டாம் வகுப்பு வரை, டி.இ.டி., முடித்தவர்கள் தான், ஆசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்பதால், பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. எனவே, அரசுப் பணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை, 15 ஆயிரமாக இருந்தாலும், மற்றவர்கள், தனியார் கல்வி நிறுவனங்களில், வேலை வாய்ப்பை பெறுவதற்கு, டி.இ.டி., தேர்ச்சி, உதவியாக இருக்கும்.




1 Comments:

  1. முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு

             கேள்விகளில் அச்சுப் பிழை உள்ளதால், முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.     திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா மலையாடிப்பட்டியைச்  சேர்ந்த அந்தோணி கிளாரா தாக்கல் செய்த மனு:   முதுகலை தமிழ் பட்டப்படிப்புடன் பி.எட்., படித்துள்ளேன். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 2013-முதுகலை உதவி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2013 ஜூலை 21-ல் நடைபெற்றது.    இதில் தமிழாசிரியர் பணியிடத்துக்கான தேர்வை நான் எழுதினேன்.     ஏ,பி,சி,டி என 4 வரிசைகளில் கேள்வித்தாள்கள்அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. "பி' வரிசை வினாத்தாள் எனக்கு தரப்பட்டது.அதில் அச்சுப்பிழைகள் இருந்தது குறித்து தேர்வு அறை மேற்பார்வையாளரிடம் தெரிவித்தேன்.    அதற்கு, அவர் தேர்வு வாரியச் செயலரிடம் முறையிடுங்கள் எனக் கூறிவிட்டார்.   மற்ற 3 வரிசை கேள்வித்தாள்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றில் அச்சுப்பிழைகள் இல்லாதிருந்தன.   இந்த நிலையில், விடைகள் வெளியிடப்பட்டதும் சரிபார்த்தபோது கேள்விகளின் பொருள் மாறும் அளவுக்கு அச்சுப்பிழைகள்ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.   சரியான விடைகளைத் தேர்வு செய்து எழுதும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அவற்றில் 21 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. இவற்றுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளேன்.   விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  பிழைகள் உள்ள "பி' வரிசை வினாத்தாளை உபயோகித்தவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.    எனவே, பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.     இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. 
    Source : dinamani

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive