பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் 2,118 பி.எட்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஆக.9) தொடங்கியது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி கூறியது:
பி.எட். கலந்தாய்வுக்காக மொத்தம் 13,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப விநியோகம் தொடங்கிய இரு தினங்களில் சுமார் 4,000 விண்ணப்பங்கள் வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
உதவி மையங்கள்: விண்ணப்பங்களை பெற்றுச் செல்லும் மாணவர்களில் சிலருக்கு, விண்ணப்பத்தை சரிவர பூர்த்தி செய்யத் தெரிவதில்லை.
எனவே, விண்ணப்பத்தை தவறின்றி பூர்த்தி செய்ய உதவும் வகையில், அனைத்து விண்ணப்ப விநியோக மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் சுழற்சி முறையில் இரண்டு பேராசிரியர்கள் இடம்பெற்றிருப்பர்.
மேலும், இந்த இரண்டு தினங்களில் 50 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன.
விண்ணப்பதாரர்கள், அரசு சான்று பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றிதழ் நகல்களில் கையொப்பம் வாங்க வேண்டியது கட்டாயம் என்பதால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.
மாணவர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போதே அரசு அதிகாரியின் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பிவிட்டு, பின்னர் கலந்தாய்வில் பங்கேற்கும்போது அரசு சான்று பதிவுபெற்ற அதிகாரியின் கையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்தால் போதுமானது என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...