பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், 2,118 பி.எட்., இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும், கடந்த, 9ம் தேதி துவங்கி, 16ம் தேதி முடிவடைந்தது.
மொத்தமுள்ள 2,118 இடங்களுக்கு, 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து வருகின்றன.
இதுகுறித்து, பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் பரமேஸ்வரி கூறியதாவது: பி.எட்., படிப்புகளுக்கான, கட்-ஆப் மதிப்பெண் வரும், 26ம் தேதி வெளியிடப்படுகிறது. பாடப்பிரிவு, இட ஒதுக்கீடு வாரியான, கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு விவரங்களை, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின்,www.ladywillingdoniase.com என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 30ம் தேதி துவங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கட்-ஆப் மதிப்பெண் இருந்து, அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை எனில், கலந்தாய்வில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ளலாம். இவ்வாறு பரமேஸ்வரி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...