ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் "தினமணிக்கு' அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில், பி.எட். படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், இந்த படிப்பில் புதிய பாடப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, "கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டுமுதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 150, 105 மற்றும் 100 மதிப்பெண்கள் என மூன்று பகுதிகளாக இருந்த செய்முறைத் தேர்வு இப்போது 200, 200 மதிப்பெண்கள் என இரண்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
கல்லூரி வேலை நாள்கள் அதிகரிப்பு: மேலும் பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை 180 வேலை நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...