தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.
தகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்கு போட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ கீ ஆன்சர் படிதான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்ணை துல்லியமாக அறிந்துகொள்ள ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.
14 ஆயிரம் காலி இடங்கள்
கடந்த தகுதித்தேர்வில் 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8,849 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். 10,397 பேர் இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலி இடங்கள் அதிகமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே வேலை கிடைத்துவிட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியில் காலி இடங்கள் குறைவாக இருந்ததால் தேர்ச்சி பெற்ற எல்லாருக்கும் வேலைகிடைக்கவில்லை.
தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 சதவீதம்பேர் தேர்ச்சி பெறுவார்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்தான். இதில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும், ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களும் அடங்கும்.
பணிநியமன முறை
தற்போதைய நடைமுறையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறையிலும் (தகுதித்தேர்வு, பிளஸ்–2, டிகிரி, பி.எட். என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்படும்) நியமிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட பாடத்தில் காலி இடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும்.
அதேநேரத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிக பதிவுமூப்பு உடையவர்களுக்கும் (இடைநிலை ஆசிரியர்கள்), கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெறுவோருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
தகுதித்தேர்வு முடிவை செப்டம்பர் மாதம் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையிலும் (இடைநிலை ஆசிரியர் நியமனம்), அதிக கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
14 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலி பணி இடங்களையும் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தால் கூடுதலான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
It..,
ReplyDelete