"பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்; அதற்காக மத்திய அரசு இப்போது வழங்கும், 1.16 சதவீத பங்கை, 1.79 ஆக அதிகரிக்க வேண்டும்' என, மத்திய தொழிலாளர் துறைக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த, 2010, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில், 35 லட்சம் பேர் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், 14 லட்சம் பேர், மாதம், 500 ரூபாய்க்கும் குறைவாகவே பென்ஷனாகப் பெறுகின்றனர். மாதம், 1,000 ரூபாய் பென்ஷன் பெறுபவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். குறைந்தபட்ச பென்ஷன் தொகை நிர்ணயம் செய்யப்படாததால், மாதம், 12 ரூபாய் பென்ஷன் பெறுபவர்களும் உள்ளனர். இந்தத் தொகையை வைத்து, அவர்களால் எதையும் செய்ய முடியாது என்பதால், பென்ஷன் என்றாலே, குறைந்தபட்சம், மாதம், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என, வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரும்புகிறது.
தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளவர்கள், தொழிலாளர்களின் மாத சம்பளத்தில், அதாவது, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், 8.33 சதவீதத்தை, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக செலுத்துகின்றனர். மத்திய அரசு, 1.16 சதவீதத்தை, தன் பங்காக வழங்குகிறது. இதில், 0.63 சதவீதத்தை அதிகரித்து, 1.79 சதவீதமாக வழங்கினால், 1995ம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் படி, குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன், 1,000 ரூபாயாக உயரும் என்பது, அந்த அமைப்பின் வாதமாக உள்ளது.
இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடிதம் எழுதியுள்ளது. அதில், "குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு, மத்திய அரசு, தன் பங்கை, 1.79 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் தொழிலாளர் நலத்துறை, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, நிதித்துறைக்கு அனுப்பி வைக்கும். டந்த, 2012 - 13ம் நிதியாண்டின் படி, மத்திய அரசு வழங்கும், 1.16 சதவீத பங்கிற்காக, 1,900 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதில், 0.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், ஆண்டுக்கு, 750 கோடி முதல், 800 கோடி ரூபாய் வரை கூடுதலாக வழங்க நேரிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...