Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது! – சுப்ரீம் கோர்ட் வேதனை! + அலசல்!!


               படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும் நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை. 
 
           ஆனால், மனிதப் பண்பும் நடத்தையும் சமூகத்தில் மரியாதைக்குரிய உயர்ந்த நிலையில் இருந்தன. இப்போது அந்த நிலைமை இல்லை. மனிதனை பண்படுத்தும் வகையில் நமது கல்வித் திட்டத்தில் உடனடியாக முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும்.” என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

              மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைப் பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா கல்வி நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

                இவ்வழக்கை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,”மனிதனின் நடத்தையை மேம்படுத்தி அவனுடைய மதிப்பை உயர்த்துவதுதான் கல்வித் திட் டத்தின் நோக்கம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த குறிக்கோளை அடைவதில் நமது கல்வித் திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பது எங்கள் கருத்து. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில், கல்வியறிவு அதிகரித்துள்ளது. ஆனால், மனிதனின் நடத்தையும் பண்பும் உயர்ந்து சமுதாயத்தில் அமைதி நிலவுவதற்கு பதிலாக, பரவலாக பிரச்னைகள் நிறைந்த சூழ்நிலையே காணப்படுகிறது.

                     படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும் நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக இருக்கும். உண்மை யில் சொல் லப்போனால், இப்போது இருப்பதை போல கடந்த காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை. ஆனால், மனிதப் பண்பும் நடத்தையும் சமூகத்தில் மரியாதைக்குரிய உயர்ந்த நிலையில் இருந்தன. இப்போது அந்த நிலைமை இல்லை. மனிதனை பண்படுத்தும் வகையில் நமது கல்வித் திட்டத்தில் உடனடியாக முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரின் முயற்சியும் தேவைப்படுகிறது.

               நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்களின் கல்வியறிவு 12 சதவீதமாக இருந்தது. பின்னர், இத்தனை ஆண்டுகளில் சமூக, பொருளாதார ரீதியாக இந்தியா பெருமளவில் மாறிவிட்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு 74.04 சதவீதமாக உள்ளது. ஆனாலும், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் கூட எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். கல்வி பெற முடியாத குழந்தைகள் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கின்றனர்.

                14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியும் கல்லாமை அதிக அளவில் இருப்பது கவலையளிக்கிறது. இந்த நிலை மாறவும் இப்போதுள்ள கல்வி திட்டத்தை மாற்றியமைக்கவும் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூகமும் முக்கிய பங்காற்றுவது இன்றி அமையாதது.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

               இதையடுத்து நம் நிருபர் ஓம் சக்தி ஆசிரியர் நா. மாகலிங்கத்தைப் பார்த்து பேசியபோது,”இந்தியர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயமோ, கடமையோ சுமார் 250 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசுக்கு இருக்கவில்லை. அடிமை இந்தியாவில் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல. நதிப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை என எதுவும் அப்போது எழவில்லை.

                 காரணம் அடிமைப்பட்ட மக்களுக்கு இவற்றையெல்லாம் கோரும் உரிமை இல்லை. அமெரிக்காவில் உயர்கல்வி கற்கச் சென்ற ஜே.சி. குமரப்பா தனது டாக்டர் பட்டத்திற்தாக எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பல தகவல்களைத் தந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படிக் கொள்ளை அடித்தது என்பதை அப்போதே சுட்டிக்காட்டியுள்ளார்.

            இவ்வாறு கொள்ளை அடிக்கத் துணிந்த வெள்ளையர் ஆட்சிக்கு படித்த அடிமைகளும் வேண்டியதாக இருந்தது.
 
             அதற்காகவே தேவைப்பட்ட குமாஸ்தாக்களை மெக்காலேயின் ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் உருவாக்கியது.
 
             அந்நிய ஆங்கிலக் கல்விமுறை குமாஸ்தாக்களை அடிமை இந்தியாவில் உருவாக்கியது. அதே கல்வி முறை சுதந்திர இந்தியாவில் சுயசிந்தனை செய்பவர்களை உருவாக்காமல் அதைத் தடுக்கிறது.ஆங்கிலக் கல்வி பற்றி பாரதியார் தமது சுயசரிதையில் கூறும்போது அக்கல்வியில் அவருக்கு எள் அளவு பயனும் ஏற்படவில்லை என்றும் இதனை 40 ஆயிரம் கோயில்களில் சத்தியம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.” என்று விவரித்துக் கூறினார்!

             மேலும் அவர்,” இந்திய அளவில் உள்ள கல்விப் பிரச்னை மாதிரி தமிழகத்தின் கல்விப் பிரச்சினையைச் சரியாகக் கையாள வேண்டுமானால், முதலில் தமிழக அரசு இருமொழிக் கல்விமுறையை உடனடியாக கைவிட வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளதுபோல, மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள நடுத்தர, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்கிவிட வேண்டும்.

            தமிழ்மொழியைக் கட்டாயப்படுத்தாதப் பள்ளிகளை நடத்த தமிழகக் கல்வித் துறை அனுமதி மறுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் இப்படித்தான் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள நர்சரிப் பள்ளிகளை விளையாட்டுப் பள்ளிகளாக மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும். அங்குப் பாட போதனை இருக்கக் கூடாது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் கற்பிக்கும் மொழி தமிழ்மொழியாக மட்டுமே இருக்க வேண்டும்.

                காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிட உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் வழக்காடி வெற்றி பெற்ற தமிழக முதல்வர், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையையும் வரைமுறை செய்துவிடலாம்.தமிழக அரசு கல்விக்கு ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடியைச் செலவு செய்தும், தமிழைக் கட்டாயமாகப் போதிக்குமாறு நமது கல்விக் கொள்கை உறுதியானதாக உருவாகவில்லையே என்பது வருத்தமளிக்கிறது. இதனை ஓர் இறுதி முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நல்ல தருணம் இதுதான்” என்கிறார் நா. மகாலிங்கம்!.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive