முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு
என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில்,
மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர்
பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு
அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனால், கூடுதல் பணிப் பளுவால், டி.ஆர்.பி., அலுவலர்கள் திணறி
வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.,க்கு அடுத்தபடியாக, அதிகளவில், அரசுப் பணி
நியமனங்களை நிரப்பும் பணியை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. வெறும், 20
பணியாளர்களுடன், இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு என, ஒவ்வொரு தேர்வையும், பல
லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனால், பணிப் பளு, கடுமையாக அதிகரித்துஉள்ளது.
இதற்கு தகுந்தாற்போல், கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க,
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மிக முக்கியமான, உறுப்பினர் - செயலர் பணியிடமும்,
டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், பல மாதங்களாக, நிரப்பப் படாமல் உள்ளன.
டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளியிடம், உறுப்பினர் - செயலர் பதவி,
கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், டி.இ.டி., தேர்வை, 7
லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவதால், அந்தப் பணியை கவனிப்பதற்கு என, தனி
இயக்குனர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது.
தொடக்க கல்வித் துறை இயக்குனராக இருந்த சங்கர், டி.இ.டி., இயக்குனராக
நியமிக்கப்பட்டார். இவரது பணியிடம், ஒரு ஆண்டு வரை என்ற அளவில்,
ஏற்படுத்தப்பட்டது. பதவிக்காலம் முடிவடைந்தும், மீண்டும் நீட்டிப்பு செய்ய,
நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கருக்கு, வேறு பணியிடமும் வழங்கவில்லை.
இதனால், பல மாதங்களாக, அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகக்
கூறப்படுகிறது.
டி.இ.டி., இயக்குனர் இல்லாததால், அவரது பணியைக் கவனிக்க, இணை இயக்குனர்
நிலையில், புதிய பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, அதன் இணை இயக்குனராக தங்கமாரி,
பணி புரிந்து வருகிறார். இவர், ஏற்கனவே, தேர்வுத் துறை இணை இயக்குனராக
பணிபுரிந்து வருகிறார். டி.ஆர்.பி., பணியிடம், கூடுதலாக தரப்பட்டுள்ளது.
இரு துறைகளிலும், கடுமையான பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை, இணை
இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது. வரும், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் போட்டித்
தேர்வு, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு என, அடுத்தடுத்து
பல்வேறு தேர்வுகள் நடைபெற இருப்பதால், டி.ஆர்.பி., பணிப் பளு
அதிகரித்துள்ளது.
மிக முக்கியமான ஒரு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், தேவையான
கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...