இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப்
படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித்
திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.
ஒன்றில் இரண்டு...
படித்து முடித்து பணிவாய்ப்புக்காக பட்டதாரிகள் அல்லாடுவதை தவிர்க்கும் வகையில், இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு, ஒருவரை பணிக்கு தயார் செய்கின்றன. இடைவெளியின்றி, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வழங்குகின்றன.
சில நிறுவனங்களுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மை திறன்களைப் பெற்ற மனிதவளம் தேவைப்படுவதால், அவை, இரட்டைப் பட்டப் படிப்பு பெற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சாதாரண பட்டப் படிப்பு தகுதிகளைவிட, பணிக்கு தேவையான உடனடித் தகுதியைப் பெறுவது மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். பி.டெக்., படிப்புடன், எம்.பி.ஏ., பட்டத்தையும் (4+1) என ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்யலாம். எனவே, இந்த இரட்டைப் பட்டப் படிப்பு திட்டத்தை, விரைவுபடுத்தப்பட்ட படிப்புத் திட்டம் என்றும் கூறலாம்.
படிப்பின் காலகட்டம்
படிப்பை பொறுத்து, கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, காலகட்டம், 4 முதல் 7 ஆண்டுகள் வரை விரியும். இன்டர்மீடியேட் முதல் பிஎச்.டி., வரையான படிப்புகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி பெறும்போது, மாணவர்களை எளிதாக பணிக்கு தயார்படுத்த முடிகிறது மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டத்துடன் மாணவர்கள் நன்கு பழக்கமாகி, மேம்பட்ட சிந்தனைகளைப் பெறுகிறார்கள் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உற்சாகமாக படித்தல்
பொறியியல் பிரிவில், இரட்டைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களுக்கான பாடங்கள், வேறுபட்ட முறையில் விரிவாக கற்பிக்கப்படுவதின் மூலம், புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பொறியியல் முதுநிலைப் பட்டம்பெற மொத்தம் 6 ஆண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகளிலேயே முதுநிலைப் பட்டம் பெற்றுவிடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.
பழைய பட்டப் படிப்பு முறைகளிலிருந்து(6 ஆண்டுகள் படிப்பு) புதிய இரட்டைப் பட்டப் படிப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, பல கல்வி நிறுவனங்களில் உற்சாகமுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மாணவரை, தொழில்துறைக்கு தயாரானவராக மாற்றுவதில், இந்த இரட்டைப் பட்டப்படிப்பு முறை தெளிவாக செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் புதிய கல்வி முறையின் மூலமாக, நுணுக்க சிந்தனை மற்றும் கற்றல் உற்சாகம் அதிகரிக்கிறது. பொதுவாக, இரட்டைப் பட்டப் படிப்பின் பாடத்திட்டமானது, நிறைந்த உள்ளடக்கமும், பயன்பாட்டு அடிப்படையும் கொண்டது.
பாடத்தை தெரிவு செய்தல்
ஒரு கல்வி நிறுவனத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை தேர்வு செய்கையில், அந்த கல்வ நிறுவனத்தின் அங்கீகாரம், புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை கட்டாயம் மனதில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மூன்றாம் வருட பி.டெக்., படிப்பை முடித்தவுடன், எம்.டெக்., படிப்பில் சேர முடியும்.
ஆறாவது செமஸ்டர் முடிந்த பின்னர், 6.5 CGPA அளவில் மதிப்பெண் வைத்துள்ள அத்தகைய ஆர்வமிக்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துறைத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதன்மூலம், இரட்டை டிகிரி படிப்புக்கு மாறிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
இரட்டை டிகிரி படிப்புகளுக்கான சேர்க்கை முறை, கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்கள், முதல் நாளிலிருந்தே, இரட்டை டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்கள், இரட்டை டிகிரி படிப்பிற்கான சேர்க்கையில், மாணவர்களின் சூழலைப் பொறுத்து, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்களில், இரட்டை டிகிரி படிப்பு முறையை ஒரு மாணவர் கடினமாக உணர்ந்தால், அவர் எம்.டெக்., படிப்பில் சேராமலேயே விலகிக் கொள்ளலாம்.
பணத்தையும், நேரத்தையும் சேமித்தல்
போட்டி நிறைந்த சந்தையில், ஒரு வருடத்தை சேமிப்பதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர், ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.டெக்., படிப்பை முடித்தால், இரட்டை டிகிரி பட்டதாரிக்கு சமமாகவே கருதப்படுவார் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இரட்டைப் பட்டப் படிப்பானது, தொழில் தொடர்பாக, விரைவான முடிவெடுக்க உதவுகிறது.
பொதுவாக, பி.இ., படிப்பிற்கு 2 லட்சமும், எம்.டெக்., படிப்பிற்கு 1.25 லட்சமும் செலவாகிறது. ஆனால், இரட்டை டிகிரி படிப்பில், குறைந்தபட்சம் 1 லட்சம் வரை மிச்சமாகிறது மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்காக எழுத வேண்டிய நுழைவுத்தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அலைச்சலின்றி, இரண்டு பட்டங்களையும், ஒரே கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.
சந்தை தேவையை நிறைவுசெய்தல்
இன்றைய நிலையில், ஒவ்வொருவரும் ஸ்பெஷலைசேஷனை எதிர்பார்க்கின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக இருந்தாலும், அனுபவம் அதிகமுள்ளவர்களே, தொழில்துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில்தான், இரட்டை டிகிரி படிப்பின் தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. தனித்தனியாக இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்தால் என்ன மரியாதையோ, அதேயளவு மரியாதைதான், இரட்டை டிகிரி முறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடிப்பதற்கும் கிடைக்கிறது.
ஒரு பி.டெக்., பட்டதாரி ஆண்டு சம்பளமாக ரூ.6 - 12 லட்சம் பெறுகிறார் என்றால், ஒரு இரட்டை டிகிரி முடித்தவர், ஆண்டுக்கு ரூ.9 - 15 லட்சங்கள் பெறுகிறார். கூகுள் போன்ற பிரபலமான நிறுவனங்கள், பி.டெக்., பட்டதாரிகளை விட, இரட்டை டிகிரி முடித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது, ஆராய்ச்சி செய்யும் மனப்பாங்கு மற்றும் தனியாக சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்ற நபர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மாறுபாடுகள்
குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு, இந்த இரட்டை டிகிரி படிப்பு ஒத்துவருவதில்லை. அவர்கள் இப்படிப்பில் சேர விரும்புவதுமில்லை. ஏனெனில், சிலருக்கு பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கும்போதே, நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, அதற்குமேல் அவர்கள் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புவதில்லை. எனவே, கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, நிலைமை வேறுபடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...