Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்னென்ன பின்னணி உடையவர்கள் அரசு பணிக்கு வருகிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு


அரசு வேலை மீது மோகம்
         என்னதான் தனியார் துறையில் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் அதிக சம்பளத்தை கொட்டிக்கொடுத்தாலும் இன்றைய இளைஞர்களிடம் அரசு வேலை மீது மட்டும் தனி மோகம் உள்ளது. என்ஜினீயரிங் முடித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல வேலையில் இருக்கும் பலர் அண்மைக்காலமாக அங்கிருந்து அரசு பணி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
 
         ஏராளமான என்ஜினீயர்கள் கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1, குரூப்–2 தேர்வுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

       தனியார் வேலையில் இருப்பவர்கள் அரசு பணி நோக்கி வருவதற்கு வேலைப்பளு, மனஅழுத்தம் போன்றவை காரணங்களாக இருந்தாலும் அவற்றில் முக்கியமாக இருப்பவை பணி பாதுகாப்பும், சமூக அந்தஸ்தும்தான். சமீப காலமாக ஐ.ஏ.எஸ். தேர்விலும் சரி, தமிழ்நாட்டில் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1, குரூப்–2, குரூப்–4 தேர்வுகளிலும் சரி அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினர் அதிகளவில் வெற்றிபெற்று வருகிறார்கள் என்பது கண்கூடு.

உளவியல் காரணம்

          இதற்கு இடஒதுக்கீடு ஒரு காரணம் என்றாலும், முக்கிய காரணமாக உளவியல் அறிஞர்கள் கூறுவது, காலகாலமாக சமூகத்தால் ஒடுக்கிவைக்கப்பட்டவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போது, சூழ்நிலை சாதகமாக வரும்போது அரசு அதிகாரத்தை சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற மன உந்துதலால்தான்.

          அரசு பணிக்கான தேர்வுகள், அதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள், அரசின் உதவிக்கரம் போன்றவை அவர்களின் முயற்சிகளுக்கு உரமூட்டுகின்றன. எந்தவிதமான பெரிய குடும்ப பின்னணியோ இல்லாதவர்கள், கல்வி வாசனை இல்லாத குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள் அரசு துறையில் உயர் பதவிக்கு வந்துகொண்டிருப்பதே இதற்குச் சான்று.

என்னென்ன பின்னணி?

           இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் என்னென்ன பின்னணி கொண்டவர்கள்? தமிழக அரசு பணிக்கு வருகிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது. சமீபத்தில் அரசு பணியில் சேர்ந்துள்ளவர்களின் குடும்ப பின்னணி என்ன? அவர்களின் பெற்றோர் மற்றும் பொருளாதார நிலை, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களா? நகர்ப்புறத்தில் வசித்து வருபவர்களா? கல்வித்தகுதி என்ன? என்னென்ன படிப்பு படித்தவர்கள்? என்பன குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும்.

              இந்த ஆய்வுக்கு வேறு ஒரு காரணமும் இல்லை என்றும், எந்த மாதிரியான நபர்கள் அரசு வேலைக்கு வருகிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள உதவும் வகையில் ஒரு தகவல்தொகுப்பை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.

தமிழ் வழி இடஒதுக்கீடு

               தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு (ஒவ்வொரு சமூகப் பிரிவிலும்) வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பலர் அரசு பணியில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive