விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அங்கு கட்டட வசதிகள் இல்லாமல் உள்ளது என தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாவிலுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் நடந்தது.
ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசுகையில், "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகைப் பதிவு செய்து விட்டு, தங்கள் சொந்த வேலைகளை கவனிக்கின்றனர். எனது தலைமையில் 4 தலைமை ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தாமதமாக பள்ளிக்கு வருவதும், பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இனி தவறுகள் நேர்ந்தால் கண்காணிப்புக்குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் பேசும் போது, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 40 பள்ளிகளில், போதிய கட்டட வசதி இல்லை.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பரவலாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. நியாய விலைக்கடை மற்றும் டாஸ்மாக்கிற்கு நேரடியாக லாரிகள் மூலம் பொருட்களை அனுப்புவது போன்று இலவச கல்வி உபகரணங்களையும் அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...