Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்


              ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.

           தேவையான கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளிக்கூடங்களில் செய்யப்பட்டுள்ளன. கணினி, புரொஜெக்டர், பிரிண்டர், தொலைக்காட்சி, டி.வி.டி. என்று கற்றலுக்கான சாதனங்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டே வருகின்றன. சி.சி.இ., ஏ.பி.எல்., ஏ.எல்.எம். என்று பல்வேறு அற்புதமான கல்வித் திட்டங்களை அரசு தந்துகொண்டே இருக்கிறது.

             ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30-என்பதற்குக் கீழே போகிறது. அதாவது ஒரு ஆசிரியருக்கு 30-க்கும் குறைந்த மாணவர்களே வகுப்பில் உள்ளனர். ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 10 பேர் அல்லது 20 பேர் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2 ஆயாக்களும் சத்துணவு அமைப்பாளரும் உள்ளனர். இத்தனைக்குப் பிறகும் கல்வியில் முன்னேற்றமில்லை, பின்னேற்றம்தான்.

           முதல், இடை, கடை என்று மாணவர்களின் கல்வித்திறனில் மூன்று நிலை இருப்பர் என்று நன்னூல் கூறுகிறது. இதையே கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டை என்று உவமையாகக் கூறுவர். "அனைவருக்கும் தேர்ச்சி' என்ற கொள்கையால் வாழைமட்டைகளை வழிக்குக் கொண்டுவரத் தெரியாமல் ஆசிரியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

              "படிக்காமல் இருந்தால் ஆசிரியர் தண்டிப்பார், இதே வகுப்பில் மேலும் ஓராண்டோ சில ஆண்டுகளோ மீண்டும் படிக்க வேண்டும்' என்கிற அச்சங்கள் இல்லாததால் மாணவர்கள் படிப்பதுமில்லை, ஆசிரியர்களை மதிப்பதும் இல்லை. கல்வி எப்படித் தரமாக இருக்கும்?

             அவ்வளவு ஏன், வகுப்பில் குப்பை போடும் மாணவனையும் குறும்பு செய்யும் மாணவனையும் கூட வலுவாகக் கண்டிக்க ஆசிரியர்கள் தயங்கும் நிலையே காணப்படுகிறது. இது மாற வேண்டுமானால் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது பள்ளிக்கூடத்தின் தேர்ச்சிக்காகவோ ஆசிரியர்களின் கெüரவத்துக்காகவோ அல்ல, மாணவர்கள் உருப்பட்டு முன்னுக்கு வருவதற்காகவே அவசியப்படுகிறது.

              ஒரு ஆசிரியருக்கு ஓராண்டில் சுமார் 220 நாள்கள்தான் வேலை. 15 தற்செயல் விடுப்புகள், 15 மருத்துவ விடுப்புகள், 10 சி.ஆர்.சி. மையம் என்று ஆண்டில் 20% நாள்கள் ஆசிரியர்களால் வகுப்புகளுக்கு வரமுடியாது. இந்த நாள்களில் அவரிடம் படிக்கும் மாணவனின் படிப்பு நிச்சயம் பாதிக்கும். ஈராசிரியர்கள் பள்ளிகளில் ஆண்டுக்குப் பாதி நாள்கள் ஓராசிரியர் மட்டுமே பள்ளியில் இருப்பார்.

               தலைமையாசிரியர் தன் மாணவனுக்கு மற்ற ஆசிரியரைப்போல கற்பிக்கும் பணியை முழுமையாகச் செய்ய முடியாது. கல்விக்குழு, மேலாண்மைக்குழு, திட்டக்குழு, அன்னையர் குழு, சத்துணவு மேற்பார்வைப்பணி, பள்ளிக்கு கட்டடம் கட்ட கட்டடப் பணி, கழிவறைப் பணி, சம்பளப்பட்டியல் தயாரித்தல், வரவு - செலவுப் பணி, அரசு கேட்கும் புள்ளிவிவரங்களைத் தரும் பணி, 16 வகை இலவசங்களைப் பெற்றுவந்து விநியோகிக்கும் பணி, வங்கிப்பணி, தலைமை ஆசிரியர் கூட்டம் என்று பாடம் சொல்லித்தருவதல்லாத பணிகள் ஏராளம்.

               அலுவலகப் பணியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தலைமை ஆசிரியர் தன்னுடைய வகுப்புப் பிள்ளைகளுக்கு அதிகக் கவனத்துடன் பாடம் சொல்லித்தர முடியாது. முன்னேர் செல்லும் வழி சரியில்லை என்றால் பின் ஏர் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை.

              வகுப்புகளுக்குச் செல்லும் முன்னதாக ஆசிரியர் தான் கற்றுத்தரப்போகும் பாடத்தை நன்கு ஒத்திகை பார்த்து, மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லித்தர வேண்டும். இது இப்போது சாத்தியமா?

              அலைபேசி அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் எதிர்கொள்ளவே பல தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேரம் அதிகம் தேவைப்படுகிறது.

                இவற்றைச் சீர் செய்ய அரசு பல நிர்வாக நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

                25 மாணவர்களுக்குக் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் 3, 4, 5 வகுப்புகளை பக்கத்தில் இருக்கும் பெரிய அரசுப் பள்ளிகளோடு இணைத்துவிடலாம். இப் பள்ளியிலிருந்து ஓராசிரியரைப் பெரிய பள்ளிக்கு அனுப்பிவிடலாம். இப்பள்ளி மாணவர்களை ஆயாவின் துணையோடு பெரிய பள்ளிக்கூடத்துக்கு தினமும் அனுப்பி வைக்கலாம்.

                மாணவர் எண்ணிக்கை 10 ஆகவே இருந்தாலும் ஒரு வகுப்புக்கு 5 புத்தகங்கள் என்று 3 வகுப்புகளுக்கு 10 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 15 புத்தகங்களிலிருந்து பாடங்கள் நடத்த வேண்டும். இதில் தரம் எப்படி கிடைக்கும்?

                    சிறந்த கல்விக்காக மாணவர்கள் ஏங்குகிறார்கள்; சிறந்த மாற்றத்துக்காக ஆசிரியர்களும் தவிக்கிறார்கள். எனவே கல்வித்துறையில் தரத்தை மேம்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நா.இன்பக்கனி, உடுமலை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive