காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக்., பள்ளி
பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணிநேரம்
தமிழ் தேர்வு எழுதினார்.
இதற்காக துவக்க விழா நேற்று கலைவாணி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் கண்ணன் வரவேற்றார். நேற்று காலை 10 மணிக்கு மாணவர் அருண்குமார் தேர்வை எழுத ஆரம்பித்தார்.
இதற்காக தமிழ் முதல்தாள், இரண்டாம் தாளில் தலா 5 வினாத்தாள்களை, எஸ்.எம்.எஸ்.வி., டி பிரிட்டோ, கோட்டையூர் முத்தையா அழகப்பா, புதுவயல் வித்தியாகிரி, கலைவாணி மெட்ரிக்., பள்ளி தமிழாசிரியர்கள் தயாரித்திருந்தனர். ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று மணிநேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு 10 நிமிடம் இடைவெளி விடப்பட்டது.
இன்று காலை 10 மணியுடன் தேர்வு எழுதும் நேரம் முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட 24 மணி நேரத்தில், மாணவர் மொத்தம் 8 வினாத்தாளுக்கு விடை எழுதுகிறார். ஏற்கனவே இதற்கு முன்பு இதே பள்ளியை சேர்ந்த மாணவி நாச்சாள், மாணவர் சதீஷ் ஆகியோருக்கு தமிழ் இலக்கியம் குறித்த தேர்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்த தேர்வை அவர்கள், காலை 10 முதல் இரவு 10 மணி வரை எழுதினர். இவர்கள் சாதனையை முறியடிக்கும் விதமாக, தற்போது 24 மணி நேரம் தேர்வு எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழாசிரியர் செயம்கொண்டான் கூறும்போது, "கின்னஸ் சாதனையின் முன்னோடியாக, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில், இந்த தேர்வை மாணவர் எழுதி வருகிறார். இதுகுறித்து விபரங்கள் லிம்கா குழுவினருக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
மாணவர் சோ.அருண்குமார் கூறும் போது, "தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் இந்த தேர்வை எழுதுகிறேன். புத்தகத்தை முழுவதும் முடித்துள்ளேன். 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பேன். அப்பா இறந்து விட்ட நிலையிலும், அம்மா கலைச்செல்வி பக்க பலமாக உள்ளார்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...