முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும்
சில லட்சம் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், "ஆசிரியர் தேர்வு தொடர்பான
பள்ளிக்கல்வித் துறை அரசாணை 252-ஐத் திரும்பப்பெற வேண்டும்; தகுதித்
தேர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி, "ஆசிரியர் தேர்வின்போது ஆந்திர மாநிலத்திலும், அசாமிலும் உள்ளது போல தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு குறைப்பதால் தரம் குறையாது' என்றும் வாதிட்டிருக்கிறார். மாநில கல்விக்கான பொதுமேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "பிளஸ் 2 தேர்வில் 50% மதிப்பெண்ணுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு வெயிட்டேஜ் பூஜ்ஜியம் என்று உள்ளது' என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திரம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடத்தப்படும் அதே முறையில் தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டபோது, தேர்ச்சியானோர் சில நூறு பேர்தான். ஆகவேதான் தற்போதைய "வெயிட்டேஜ்' முறை அமலாக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வெயிட்டேஜ் முறை வேண்டாம் என்பதற்காகக் கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் இப்போது களத்தில் இறங்கியுள்ளார்கள்.
அரசாணை 252, பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விதிக்கும் வழிமுறைகள்தான் என்ன?
மொத்த மதிப்பெண்கள் 100. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் 60, பி.எட் தேர்ச்சிக்கு 15, பட்டப்படிப்புக்கு 15, மேனிலைக் கல்வி தேர்ச்சிக்கு 10 மதிப்பெண் எனப் பிரித்துள்ளனர். இந்த நான்கு பிரிவுகளிலும் அவர்களது தேர்ச்சி விழுக்காட்டின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
பிளஸ் 2: 90% மதிப்பெண் பெற்றிருந்தால் முழுமையாக 10 மதிப்பெண் கிடைக்கும். குறையும் ஒவ்வொரு பத்து மதிப்பெண்களுக்கு ஏற்ப வெயிட்டேஜ் 8, 6, 4, 2 ஆகக் குறையும். 50%க்கு குறைவாக இருந்தால் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது.
பி.எட். மற்றும் பட்டப்படிப்பு: 70% மதிப்பெண்ணுக்கு மேலாகப் பெற்று தேர்ச்சி பெற்றவருக்கு முழுமையாக 15 மதிப்பெண். 50% முதல் 70%க்குள் மதிப்பெண் பெற்றவருக்கு "வெயிட்டேஜ்' மதிப்பெண் 12. ஐம்பது விழுக்காட்டுக்குக் குறைவு என்றால் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: இதில் 90%க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முழுமையாக 60 வழங்கப்படும். அடுத்தடுத்து குறையும் 10 மதிப்பெண்களுக்கு ஏற்ப 54, 48, 42 என வெயிட்டேஜ் மதிப்பெண் குறைந்துகொண்டே போகும்.
இந்த நான்கு மதிப்பெண்களின் கூட்டுத்தொகையில் கிடைக்கும் மதிப்பெண் - பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான "கட்-ஆஃப்' மதிப்பெண் போன்றது. ஆசிரியர் நியமன காலியிடங்களில் அந்தந்த இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களில், அவரவர் பெற்ற கூட்டு மதிப்பெண் தரவரிசையில் பணிநியமனம் இடஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும்.
பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு இடஒதுக்கீடுக்கு எதிரானது அல்ல என்றால், அரசாணை 252 மட்டும் எப்படி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது ஆகிவிடும்? பிளஸ் 2 தேர்ச்சிக்கு குறைந்தபட்சம் 35% மதிப்பெண் எப்படி எல்லா மாணவருக்கும் பொதுவானதோ அதேபோன்றதுதானே ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மதிப்பெண் பெற வேண்டும் என்பதும்!
இதில் எந்தச் சிக்கலும் இல்லை. இருந்தும் கல்வியாளர்கள் இதில் ஏன் குறை காண்கிறார்கள்? பட்டம் மற்றும் பிளஸ் 2, பி.எட். தேர்வில் 50% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வெயிட்டேஜ் தர வேண்டும்; இவர்கள் கிராமத்தில் படித்தவர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
அரசியல்வாதிகள் குறை கூறினால் அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். கல்வியாளர்களும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவதுதான் வியப்பாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில், அந்தந்த இடஒதுக்கீட்டு காலியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நேர்ந்த அதே குறைபாட்டுடன், தகுதியைப் பற்றி கவலைப்படாமல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிறார்களா?
தனியார் பள்ளிகள், ஆசிரியர்களை நியமிக்கும்போது, அவரது கற்பித்தல் திறனைப் பரிசோதித்த பிறகே, வகுப்புகளில் பாடம் நடத்தச்சொல்லி மதிப்பீடு செய்த பிறகே பணிக்கு அமர்த்துகிறார்கள். அங்கே இடஒதுக்கீடும் கிடையாது. அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், ஆசிரியர்களின் தரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரம் எவ்வாறு இருக்கும்? தனியார் பள்ளிகளை மட்டுமே பெற்றோர் விரும்பவேண்டும் என்ற கட்டாயச் சூழலை உருவாக்க இந்தக் கல்வியாளர்கள் களமிறங்கி இருக்கிறார்களோ என்கிற ஐயப்பாடல்லவா எழுகிறது.
இந்தக் கல்வியாளர்கள் அனைவருக்கும் ஒரேயொரு கேள்வி - உங்கள் குழந்தைகள், பேரன் பெயர்த்திகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா? தனியார் பள்ளியிலா?
அரசுப் பள்ளிகளில் வசதி இல்லாதவர்களின் குழந்தைகள்தான் படிக்கிறார்கள். அப்படியானால், ஏழைக் குழந்தைகளுக்கு யார் வேண்டுமானாலும், எந்தத் தகுதியும் இல்லாமல், பாடம் நடத்தலாம் என்பதுதான் தமிழகக் கல்வியாளர்களின், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் சிந்தனையா? இவர்களுக்கு அடித்தட்டு மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையே இல்லையா?
tamil mediem pg trb recruitment enna aachu
ReplyDeleteany body know