Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மயக்கமென்ன, இந்த மெளனமென்ன? - தினமணி கட்டுரை


          இன்னும் சில நாள்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை என ஒவ்வோர் ஆண்டும் புறப்படும் சர்ச்சைகள் நிகழாண்டும் தொடங்கும், தொடரும்.
 
          இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கோ, அரசின் கவனத்துக்கோ இப் பிரச்னை எடுத்துச் செல்லப்படும்போது ""உரிய ரசீதுடன் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என பதில் கிடைக்கும். அதுவும் வழக்கமானதுதான்.

         முதலில், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் உரிய ரசீதுகளைத் தருவதில்லை.

          கடலில் கப்பல் செல்லும்போது அதன் மூன்றில் ஒரு பகுதிதான் கடல்மட்டத்துக்கு மேலே தெரியும். இரண்டு மடங்கு கடலுக்குள் மறைந்திருக்கும். தனியார் பள்ளிகளில் கட்டண விஷயங்களும் இப்படித்தான். வசூலிக்கப்படும் கட்டணங்களின் மொத்தத் தொகையில் நாலில் ஒரு பகுதிக்குக்கூட ரசீது வழங்கப்படுவதில்லை.

             இரண்டாவது, அப்படியே தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் அனைத்துக்கும் உரிய ரசீதைத் தந்தாலும் எந்தப் பெற்றோரும் அதிகாரிகளிடமோ, ஆட்சியரிடமோ, அரசிடமோ புகார் அளிக்கச் செல்வதில்லை. ஏனெனில், ஏதேனும் ஒருவகையில் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் காரணம். அப்படியிருக்க, உரிய ரசீதுடன் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புக்கு என்ன பலன் இருக்கப்போகிறது?

          ஆனால், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை என்று கூக்குரலிடுவதும்கூட தவறுதான். ஏனெனில், தனியார் பள்ளிகள் தொடங்கப்படுவதே லாபம் பார்க்கத்தான் என்றாகிவிட்ட சூழலில் அவர்களிடம் நியாயத்தையும், நேர்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

           திரையரங்குகளில் ரூ. 20 என அச்சிட்ட டிக்கெட்டை பல மடங்கு விலை கொடுத்து வாங்கிப் படம் பார்க்கிறோம். இந்தத் திரையரங்குக்கு நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என யாரும் நம்மை நிர்ப்பந்திப்பதில்லை. நாமாகத்தான் செல்கிறோம். அதேபோல, தனியார் பள்ளிகளும் "உங்கள் பிள்ளைகளை இங்குதான் சேர்க்க வேண்டும்' என நிர்ப்பந்திப்பதில்லையே!

            ரசீதுதான் தருவதில்லையே தவிர, எந்தெந்த வகையில், எப்படியெல்லாம் கட்டணங்கள் வசூலிக்கிறோம் என அவர்கள் வாய்மொழியாகவே கூறிவிடுகிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு, பிள்ளைகளையும் அங்கு சேர்த்துவிட்டு அதன் பிறகு கட்டணக் கொள்ளை என கூப்பாடு போடுவதில் அர்த்தம் இருக்கிறதா?

                   நல்லவேளை, திரையரங்குகளைப்போல தனியார் பள்ளிகள் இன்னும் பாரபட்சம் காட்டத் தொடங்கவில்லை. திரையரங்குகளிலோ கட்டணங்களுக்கு ஏற்ப ரசிகர்கள் அமரும் இடம் வேறுபடுகிறது. கல்வி நிலையங்களிலோ கேட்கும் கட்டணங்களைக் கொடுத்துவிட்டால் மாணவர்களிடத்தில் வேறுபாடு காட்டப்படுவதில்லை. அந்தவகையில் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

           நடைபாதைக் கடைகளில் தரமான ஆடைகள் விலை மலிவாக விற்கப்பட்டாலும் அங்கு முடிந்தவரை பேரம் பேசும் நாம், அதே ஆடையை கண்ணைப் பறிக்கும் வண்ணவண்ண விளக்குகளை பகல்போலப் பளிச்சிடச் செய்யும் ஜவுளிக் கடைகளுக்குச் சென்று கூடுதல் விலை எனத் தெரிந்தாலும் மறுவார்த்தை கூறாமல் வாங்கிக்கொண்டு வருகிறோம். இங்கு ஆடை விற்பனைக்கும், அங்கு அறிவு விற்பனைக்கும் அதிக வித்தியாசமில்லை. காரணம் கல்வி "கடை'ச்சரக்காகிவிட்டதுதான்!

           அதனால்தான், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் படித்தால் மூன்றாவது பிள்ளைக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை (இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்போல), தவணை முறையில் கட்டணம் செலுத்துதல் (மாதத் தவணையில் கட்டில், சேர் வாங்குவதுபோல) என்றெல்லாம் தனியார் பள்ளிகள் புதுப்புது உத்திகளைக் கையாளுகின்றன.

           கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டிக்காமல் இதென்ன சமாதானப் பேச்சு எனக் கேள்வி எழலாம். தனியார் பள்ளிகளும், அதிகாரிகளும், அரசும் அவரவர் விஷயத்தில் தெளிவாக இருக்கும்போது பெற்றோர் மட்டும் ஏன் குழப்பத்தில் மூழ்க வேண்டும்? பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பண அலைச்சலுக்கும், சேர்த்துவிட்டு மன உளைச்சலுக்கும் ஏன் உள்ளாக வேண்டும்?

          நன்கு விசாரித்தால் ஒவ்வோர் ஊரிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஒருசில தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பல பள்ளிகளும் இருக்கவே செய்கின்றன. அத்தகைய பள்ளிகளை நாடலாம். அல்லது சமச்சீர் கல்வி என்றாகிவிட்டதால் எவ்வித தயக்கமும் இல்லாமல் அரசுப் பள்ளிகளை நாடலாமே. நிதானமாக யோசித்துப் பார்த்தால், "தனியார் பள்ளிகளின் மீது மயக்கம் என்ன?', "மற்ற பள்ளிகள் என்றால் மெளனம் என்ன?' என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைக்கவே செய்யும்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive