Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல், மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண்களில் குளறுபடி


                   பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான, கட்-ஆப் மதிப்பெண் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், கட்-ஆப் மதிப்பெண்கள், மாறியுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்காத போதும், அவர்களுடைய விடைத்தாள்களை, தேர்வுத்துறை, மறு மதிப்பீடு செய்ததில், ஏராளமானோருக்கு, மதிப்பெண்கள் குறைந்துள்ளன.
 
          தேர்வுத் துறையின் குளறுபடியால், மாணவர்கள், கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை, நேற்று முன்தினம், மருத்துவ கல்வி இயக்ககமும், அண்ணா பல்கலையும் வெளியிட்டன. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், தங்களுடைய, கட்-ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது, ஏற்கனவே தெரியும் என்றாலும், அதை, இணைய தளத்தில் சரிபார்த்த போது, பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

                 ஏராளமான மாணவ, மாணவியரின், கட்-ஆப் மதிப்பெண்கள், ஏற்கனவே இருந்ததை விட, குறைந்திருந்தது தான், அதிர்ச்சிக்கு காரணம். 0.25 மதிப்பெண், 0.5 மதிப்பெண் குறைந்தாலே, கலந்தாய்வில், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பின் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்ற நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், "கட்-ஆப்" மதிப்பெண்களில், மாற்றம் ஏற்பட்டு இருப்பதை கண்டு, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

             2 மதிப்பெண் முதல், 10 மதிப்பெண்கள் வரை, "கட்-ஆப்"பில் குறைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோருடன், நேற்று, மருத்துவக்கல்வி இயக்ககத்திலும், அண்ணா பல்கலையிலும் குவிந்தனர். பிளஸ் 2 மறு மதிப்பீட்டு முடிவுகளுக்குப் பின், புதிய மதிப்பெண்கள் அடிப்படையில், கட்-ஆப் மதிப்பெண் தயாரித்து, வெளியிடப்பட்டிருப்பதாகவும், மதிப்பெண் சரிந்ததற்கு, தாங்கள் காரணம் கிடையாது என்றும், இரு துறைகளும் தெரிவித்தன.

             ஆனால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கும், மதிப்பெண் சரிந்ததால், காரணம் தெரியாமல், மாணவர்கள் அழுதபடி, மறுமதிப்பீட்டு பணிகள் நடக்கும், சென்னை, எழும்பூரில் உள்ள மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர்.

                 மாணவர்கள் மற்றும் பெற்றோர், அங்கிருந்த அதிகாரிகளிடம், சரமாரியாக கேள்விகளை கேட்டனர். சரியான பதில் கிடைக்காததால், பலரும் கண்ணீர் விட்டனர். விடைத்தாள் நகல் கேட்டு, 84 ஆயிரம் பேரும், மறு கூட்டலுக்கு, 16 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். விடைத்தாள் நகல் கேட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும், இணைய தளத்தில், விடைத்தாள் நகலை, தேர்வுத்துறை வெளியிட்டது.

                          விடைத்தாள் நகலை பெற்ற, 84 ஆயிரம் மாணவர்களில், 5,600 பேர், மறு மதிப்பீடு கோரி, விண்ணப்பித்ததாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில், 80 சதவீதம் பேரின் மதிப்பெண்களில், மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

              அதன்படி, 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண்களில், மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதில், விண்ணப்பிக்காத மாணவர்களின் விடைத்தாள்களும், மறு மதிப்பீடு செய்யப்பட்டு, அதில், மதிப்பெண்கள் குறைந்திருப்பது தான், பெரிய குளறுபடி. மாணவர்கள், மறு மதிப்பீடு விண்ணப்பத்தை, இணைய தளத்தில் பதிவு செய்து, அதன்பின், மறு மதிப்பீடு வேண்டாம் என, முடிவு செய்து, அப்படியே விட்டு விட்டனர்.

               இணையதளத்தில் இருந்து, கட்டண செலானை பதிவிறக்கம் (டவுண்-லோடு) செய்து, குறிப்பிட்ட வங்கியில் கட்டணத்தை செலுத்தினால் தான், விண்ணப்பம் செய்வது, நிறைவடையும். ஆனால், ஏராளமான மாணவர்கள், வெறும் பதிவை மட்டும் செய்து, அப்படியே விட்டு விட்டனர். இப்படிப்பட்ட விண்ணப்பங்களை மறுமதிப்பீடு செய்தது, பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


                  சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த, மாணவர் விஜயகுமார் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், 1,143 மதிப்பெண்கள் பெற்றேன். உயிரியல் பாடத்தில், முதலில், 191 மதிப்பெண் கிடைத்தது. தற்போது, 185 மதிப்பெண் தான் கிடைத்துள்ளது. ஆறு மதிப்பெண் குறைந்து விட்டது.

                    இத்தனைக்கும், நான் மறு மதிப்பீட்டு விண்ணப்பத்தை, முழுமையாக பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவில்லை. இயற்பியல், உயிரியல் பாடங்களின் விடைத்தாள் நகலை பெற்று, உயிரியல் பாடத்திற்கு மட்டும், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்தேன்.

                             இணையதளத்தில், பதிவு செய்தேன்; கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தாத போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பித்ததாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஆறு மதிப்பெண்கள் குறைவு காரணமாக, முதலில், 192.25 ஆக இருந்த, "கட்-ஆப்" மதிப்பெண், தற்போது, 189.25 ஆக குறைந்து விட்டது. எம்.பி.பி.எஸ்., "சீட்" கிடைக்கும் என, நம்பியிருந்தேன். தற்போது, பி.டி.எஸ்., கிடைக்குமா என்பதே, சந்தேகமாக உள்ளது. இவ்வாறு, விஜயகுமார் கூறினார்.

              நடந்த குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்பதற்கு, நிருபர்கள் பலரும் முயன்றனர். மொபைல் போனில், பலமுறை தொடர்பு கொண்டும், கருத்து தெரிவிக்க, இயக்குனர் மறுத்து விட்டார்.

                எனினும், இந்த பிரச்னை குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணா பல்கலை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால், எங்களுக்கு, பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. அனைத்துப் பணிகளையும், மிக வேகமாக செய்து முடிக்க வேண்டியுள்ளது.

              இதனால், மாணவர்களுக்கு, மிக குறைந்த கால அவகாசம் தந்து, பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறோம். இதனால் தான் குளறுபடி ஏற்படுகிறது. மாணவர்கள், இணைய தளத்தில் பதிவு செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தாத போதும், அவர்களுடைய விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டிருப்பது உண்மை தான்.

               மாணவர்கள், ஒரு நாள் கழித்து, கட்டணம் செலுத்தலாம். அதற்காக, அவர்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டாமே என்று, பதிவு செய்த அனைத்து மாணவர்களுடைய விடைத்தாள்களும், மறு மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் நடந்துள்ள பிரச்னையை, தேர்வுத் துறையிடம் விளக்கி கூறியுள்ளோம். இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

               மறுமதிப்பீட்டு திட்டத்தில் நடந்த குளறுபடிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் துறையின் முதன்மைச் செயலர் சபிதா ஆகியோரின் கவனத்திற்கு சென்றதா என தெரியவில்லை. இருவரும், ஒரு நிகழ்ச்சிக்காக, டில்லி சென்றிருப்பதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

              மாணவர்கள், தங்களின் எதிர்காலம் இருண்டு போனதை நினைத்து, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில், அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். இவர்களை சந்திக்கவோ, இவர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்கவோ, கல்லூரி சாலையில் இருந்த, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூட வரவில்லை என்பது தான், கொடுமை.

               பிளஸ் 2 மறுமதிப்பீட்டு திட்டத்தில் நடந்துள்ள குளறுபடி காரணமாக, இந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் எனவும், கல்வித் துறையும், தேர்வுத் துறையும் என்ன செய்கின்றன என்றே தெரியவில்லை&' எனவும், பெற்றோர்,ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

              இளங்கோவன் - கள்ளக்குறிச்சி: என் மகன் கோபிநாத், பிளஸ் 2 தேர்வில், 1,151 மதிப்பெண்கள் பெற்றார். உயிரியலில், 185 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில், 196 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். உயிரியல் பாடத்தில், 7 மதிப்பெண்கள், கூட்டலில் விடுபட்டிருந்தன. அதனால், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில், 7 மதிப்பெண்கள் கிடைத்தன.

                வேதியியல் பாடத்திற்கு, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முயற்சி செய்தோம். ஆனால், கட்டணம் செலுத்தவில்லை. எனினும், விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டது. நான், முன்னாள் ராணுவ வீரர்.

               இந்த ஒதுக்கீட்டின் கீழ், மகனுக்கு, டாக்டர், "சீட்&' கிடைக்கும் என, நம்பிக்கையுடன் இருந்தேன். தற்போது, அந்த நம்பிக்கையில், மண் விழுந்து விட்டது. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தபட்டதாக, பிளஸ் 2 தேர்வு உள்ளது. இதன் விடைத்தாளை, முதலில் ஒரு ஆசிரியர் மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை வழங்குகிறார்.

             அதே விடைத்தாளை, வேறொரு ஆசிரியர், மறு மதிப்பீடு திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை, முன்பைவிட குறைத்தோ அல்லது அதிகரித்தோ வழங்குகிறார். ஒரே கல்வித்தகுதி, ஒரே பாட ஆசிரியர்கள், விடைத்தாளை திருத்தி, மதிப்பெண் வழங்குவதில், இந்த அளவிற்கு, முரண்பாடுகள் வருவது ஏன்?

               இதில், மதிப்பெண் எப்படி மாறினாலும், அதன் பாதிப்பு, மாணவர்களுக்குத் தான். தேர்வுத் துறை என்ன செய்கிறது; ஒட்டுமொத்த கல்வித் துறை என்ன செய்கிறது என, எதுவுமே புரியவில்லை. ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், சரிவர செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், மறுமதிப்பீடு திட்டம் எதற்கு... அதை, ரத்து செய்துவிடலாம்.

               கார்த்திகேயன் - திருச்சி: என் மகள் கனிமொழி, ராசிபுரம், எஸ்.ஆர்.வி., பள்ளியில் படித்தார். "கட்-ஆப்&' 194 மதிப்பெண்களாக இருந்தது, தற்போது, 190 ஆக குறைந்து விட்டது. உயிரியல் பாடத்தில், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்காத போதும், இந்த அளவிற்கு, மதிப்பெண்கள் குறைந்துள்ளன.

               பிரதீப்-மாணவர்: சென்னை, மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தேன். வேதியியல் பாடத்தில், 186 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். நான், மறு மதிப்பீடு கோரி, இணையதளத்தில் பதிவு செய்யவில்லை. ஆனால், அண்ணா பல்கலை வெளியிட்ட, "கட்-ஆப்&' மதிப்பெண் பட்டியலில், வேதியியல் மதிப்பெண், 183 என, பதிவாகி உள்ளது. இந்த தவறு எப்படி நடந்தது என, தெரியவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive