Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்


         "பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும்.
 
         இதற்கு மறுத்தால், மாணவர்களும், பெற்றோரும், தர்ணா நடத்த வேண்டும்; வேறு வழியில்லை" என கல்வியாளரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

         பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், எத்தனை கல்லூரிகள், தரமான கல்லூரிகள்; எத்தனை கல்லூரிகளில், நல்ல உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன; தரமான ஆசிரியர்கள் இருக்கின்றனர்; வேலை வாய்ப்பு நன்றாக இருக்கிறதா என, எந்த தகவலும் தெரியாத நிலையில், மாணவ, மாணவியர், கலந்தாய்வுக்கு வருகின்றனர்.

          ஒரே நிறுவனம், பல்வேறு பெயர்களில், பல கல்லூரிகளை நடத்துகிறது. இதில், ஏதாவது ஒரு கல்லூரி மட்டும், தரமானதாக இருக்கும். ஆனால், பெயரில், சிறிய மாற்றங்களை செய்வதால், அது தெரியாமல், மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

           கல்லூரிகளின் நிதர்சனமான உண்மைகளை, செயல்பாடுகளை, புதிதாக வரும் மாணவ, மாணவியருக்கு தெரியப்படுத்துவது, அண்ணா பல்கலையின் கடமை என்றும், தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

          இந்த விவகாரம் குறித்து, பிரபல கல்வியாளரும், அண்ணா பல்கலையில், நீண்ட காலம் துணைவேந்தர் பதவியை வகித்தவருமான, ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

         பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களுக்கு, மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் நிலையை, வெட்டவெளிச்சமாக தெரியப்படுத்த வேண்டியது, அண்ணா பல்கலையின் கடமை. கல்லூரிகளின் ஒட்டுமொத்த அளவுகோல்களை உள்ளடக்கிய, ரேங்க் பட்டியலை தயாரித்து, அதை வெளியிடுவதில், பல்கலைக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

             மாணவர்களின் நலனை விட, வேறு ஒன்றும் பெரியது கிடையாது. எனவே, ரேங்க் பட்டியலை வெளியிட, பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியிடாத பட்சத்தில், மாணவர்களும், பெற்றோரும், தர்ணா போராட்டம் தான் நடத்த வேண்டும்; வேறு வழியில்லை.

            அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், கல்வியின், மாநில திட்டக்குழுவின், முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி கூறியதாவது:

          பெரும்பாலான கல்லூரிகள், கிராமப்புறங்களில் உள்ளன. தற்போதைய புள்ளி விவரப்படி, 10 சதவீத கல்லூரிகள், மிகச் சிறந்த கல்லூரிகளாக இருக்கின்றன; 20 சதவீத கல்லூரிகள், அடுத்த கட்டத்தில் உள்ளன; சராசரி நிலையில், 30 சதவீத கல்லூரிகள் உள்ளன; சரியில்லாத கல்லூரிகள் வரிசையில், 30 சதவீதமும், மிக மோசமான கல்லூரிகள் வரிசையில், 10 சதவீதமும் உள்ளன.

          இந்த நிலையில், கல்லூரியை தேர்வு செய்வது, மாணவர்களுக்கு, சவாலான விஷயமாகவே இருக்கும். சிறந்த கல்லூரியை கண்டுபிடிக்க, சில யுக்திகளை, மாணவர்கள் கையாளலாம்.

தங்களுடைய பலம், பலவீனம், ஆர்வம், திறனறிதல் ஆகியவற்றில், தங்களுடைய நிலையை, மாணவர்கள், முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கணிதம், அறிவியலில், 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெறும் மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேரக் கூடாது. இந்த வகை மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில், தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவில் சேரலாம்.

பொறியியல் சேர முடிவு செய்துவிட்டால், பாடப்பிரிவையும், கல்லூரியையும், முதலில் தேர்வு செய்ய வேண்டும். இதை, மாணவர்கள், தங்களின் ஆர்வம், திறமைக்கு ஏற்ப, தேர்வு செய்யலாம். பெற்றோர் அழுத்தத்திற்கு துணைபோகாமல், சுயமாக, மாணவர்கள்
முடிவெடுக்க வேண்டும்.

இதன்பின், பொருளாதார நிலை, கட்-ஆப் மதிப்பெண் ஆகியவற்றிற்கு ஏற்ப, ஐந்து கல்லூரிகளை, மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். கல்லூரியை தேர்வு செய்யும் முன், கல்லூரியைப் பற்றி, கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நிலை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விவரங்களை, கல்லூரி இணையதளம் மூலமாகவும், நேரில் சென்றும் விசாரித்து அறியலாம்.

கல்லூரிகள் தரும் துண்டு பிரசுரங்களை நம்பக் கூடாது. அதில், முக்கியமான பல அம்சங்கள், மிகைப்படுத்தப்பட்டு இருக்கும். இதில், மாணவர்கள், கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள், தேர்வு செய்ய விரும்பும் கல்லூரிக்கு, நேரில் சென்று, ஆய்வகம், நூலகம், வகுப்பறை, விடுதிகள், ஒட்டுமொத்த கல்லூரி வளாக சூழ்நிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் முன்னாள் மாணவர், அவர்களின் பெற்றோர், முன்னாள் ஆசிரியர் ஆகியோரை சந்தித்து, கல்லூரியைப் பற்றி அறிய வேண்டும். இறுதியாக, கல்லூரியின் நிர்வாகிகளையும், அவர்கள் பின்னணியையும், அறிந்து கொள்ள வேண்டும்.

பலர், பொறியியல் கல்லூரிகளை, ஒரு வியாபார நிறுவனமாகவே நடத்துகின்றனர். அவர்கள் பேச்சும், செயல்பாடுகளும், ஒன்றாக இருக்காது. பலர், குற்ற பின்னணியை கொண்டவர்களாகக் கூட இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் நடத்தும் கல்லூரிகளில், மாணவர்கள். சிக்கிக் கொள்ளக் கூடாது.

முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன்: வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ரேங்க் பட்டியல் வெளியிடக் கூடாது. கல்லூரியின் ஒட்டுமொத்த அம்சங்களையும் உள்ளடக்கி, ஆய்வு செய்து, ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியும், கல்லூரி வசதிகள் உள்ளிட்ட விவரங்களை, ஒவ்வொரு ஆண்டும், "அப்டேட்&' செய்து, அதன் விவரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதுபோன்ற விவரங்களை தொகுத்து, ஒவ்வொரு ஆண்டும், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடலாம்.

முன்னாள் துணைவேந்தர்கள் கருத்து குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: மாணவர்களின் நலன் தான், எங்களுக்கு முக்கியம். அதனால், ஒட்டு மொத்த விவரங்கள் அடங்கிய, ரேங்க் பட்டியலை வெளியிடுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் கிடையாது.

சமீபத்தில், "ஒரு ஆண்டு தேர்ச்சி சதவீத விவரங்களை வெளியிட வேண்டும்" என சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை வெளியிட்டுள்ளோம். ஒரு ஆண்டு தேர்ச்சி சதவீத விவரங்கள், மாணவர்களுக்கு பலன் தராது. குறைந்தது, ஒரு மாணவரின், நான்கு ஆண்டு செயல்பாடு விவரங்களையும் வெளியிட வேண்டும்.

தற்போது, கலந்தாய்வு துவங்கி, 10 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும், 20 நாட்கள் தான் உள்ளன. இதுபோன்ற நிலையில், திடீரென, விவரமான பட்டியலை தயாரிக்க முடியாது.கல்லூரியின் தரத்திற்கு, ஒவ்வொரு பிரிவு வாரியாக, ஒரு விதிமுறைகளை உருவாக்கி, அதற்கென, ஒரு மதிப்பெண் நிர்ணயித்து, பின், கல்லூரியில் உள்ள வசதிக்கு தகுந்தாற்போல், மதிப்பெண் வழங்கி, அதனடிப்படையில், ரேங்க் உருவாக்க வேண்டும்.

இந்தப் பணிகளை, ஓரிரு நாளில் செய்ய முடியாது. வரும் ஆண்டுகளில், முழுமையான விவரங்களின் அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை, கண்டிப்பாக வெளியிடுவோம். இவ்வாறு ராஜாராம் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive