Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !




      நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
         புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

          தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

             பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத்ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
 
           பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

          புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் ! புளூடூத் ஒரு குறுகிய  எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

           உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

 
              PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

          புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம்,லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

                 ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான  பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

                   இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
  
           தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !


       பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

            இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
 
         கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த  அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

                  புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூ த் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive