கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர்களின் விண்ணப்பங்களை விட, அரசியல்
கட்சியினரின் சிபாரிசு கடிதங்கள் குவிந்து உள்ளதால், கல்லூரி முதல்வர்கள்
என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
மாணவர்களும், தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு
கல்லூரிகளில் விண்ணப்பித்து, கலந்தாய்விற்காக காத்திருக்கின்றனர்.
பெற்றோரும், தங்களின் பிள்ளைகளை, நல்ல கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்க
வேண்டும் என, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகள்,
அரசியல்வாதிகள், என, பல்வேறு தரப்பினரை நாடி செல்கின்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள், அமைச்சர்கள் என, பல தரப்பினரின்
சிபாரிசு கடிதங்களுடன், கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட
செயலர்கள், வட்ட செயலர்கள், என, பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து,
குறிப்பிட்ட மாணவருக்கு, இடம் கொடுக்குமாறும் கல்லூரி முதல்வர்களிடம்
சிபாரிசு செய்கின்றனர்.
இந்தாண்டு, மாணவர்களின் விண்ணப்பங்களை விட, சிபாரிசு கடிதங்கள்
அதிகளவில் குவிந்து உள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கு, சிபாரிசுக்கு
வந்துள்ள கடிதங்களின் எண்ணிக்கை அதிகம். நாங்கள் எந்தவித கருத்தும்
தெரிவிக்காமல், அரசியல் கட்சியினர் தரும் சிபாரிசு கடிதங்களை வாங்கி
வைப்போம். பெரும்பாலும், அவை குப்பை தொட்டிக்கே செல்கின்றன.
சமீபத்தில் குறிப்பிட்ட மாணவருக்கு, இடம் கொடுக்க கூறி, எம்.பி.,
ஒருவர், கல்லூரிக்கு வந்தார். உடனே, நாங்கள் தரவரிசை பட்டியலை
காண்பித்ததுடன், மாணவர் சேர்க்கை விதிமுறைகளையும் தெரிவித்தோம். சரியான
முறையில், மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர், என, கூறி விட்டு அவர்
கிளம்பினார். இவ்வாறு பல சம்பவங்கள், தினமும், கல்லூரிகளில் நடக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி
கூறியதாவது: அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்து, கவுன்சிலிங் வராத
மாணவர்களின் இடங்கள், இடம் கிடைத்தும், சேராத மாணவர்களின் இடங்களும், கடைசி
நேரங்களில், காலியாக இருக்கும். இதுபோல, கலை கல்லூரிகளில் இடம் கிடைத்து
சேர்ந்து விட்டாலும், பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும்
பட்சத்தில், கலை கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
இவ்வாறு காலியாகும் இடங்கள், "வாரன்ட் அட்மிஷன்" என்ற பெயரில், ஜூலை,
ஆகஸ்ட் மாதங்களில், கடைசி நேரத்தில் நிரப்பப்படுகின்றன. இந்த காலி இடங்களை,
சில கல்லூரி முதல்வர்கள் மட்டுமே விதிமுறைகளை பின்பற்றி நிரப்புகின்றனர்.
பெரும்பாலானோர், இந்த இடங்களை, சிபாரிசு கடிதங்களின் அடிப்படையில் நிரப்பி
கொள்கின்றனர்.
அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை, மாவட்ட
செயலர்கள், வட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள்,
அமைச்சர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இடங்களை ஒதுக்கி, மாணவர்
சேர்க்கையை நடத்துகின்றனர்.இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...