"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்
விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள்
நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பல் மருத்துவ கவுன்சில் வகுக்கும்
விதிமுறைகளின்படி, முதுகலை படிப்பில், மாணவர்களை சேர்க்க வேண்டும். தகுதி
அடிப்படையில் தான், முதுகலை படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, பல்
மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரிவிக்கிறது.
இந்த விதிமுறைகள், முதுகலை பல் மருத்துவப் படிப்புகளை நடத்தும், அனைத்து
கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்
அல்லது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்லது இரண்டும் சேர்த்து,
மாணவர்கள் சேர்க்கையில் பரிசீலிக்கப்படும்.
இந்த ஆண்டில், மருத்துவக் கல்வி இயக்குனரகம், பொது நுழைவுத் தேர்வு
நடத்தி, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இருந்தும், பல
கல்லூரிகளில், இந்த தகுதி முறையை பின்பற்றவில்லை. இதனால், தகுதி வாய்ந்த
பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகள், வெளிப்படை இல்லாமல்,
மாணவர்கள் சேர்க்கையை நடத்தின. எனவே, மருத்துவ கல்வி இயக்குனரகம்
வெளியிட்டுள்ள, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியல் அல்லாமல், முதுகலை
மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கை நடத்த, தடை விதிக்க வேண்டும்.
ரேங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதை உறுதி
செய்யும்படி, அதிகாரிகளுக்கும், கல்லூரிகளுக்கும் உத்தரவிடவேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையை, அரசும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும்
கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி
சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
சார்பில், வழக்கறிஞர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன் ஆஜரானார்.
தமிழகத்தில் உள்ள, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முதுகலை பல்
மருத்துவப் படிப்பில் உள்ள இடங்களைப் பொருத்தவரை, தற்போதுள்ள சட்டப்படி,
பல் மருத்துவ கவுன்சில் மற்றும் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான
விதிமுறைகள், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் சுற்றறிக்கை, அரசு
உத்தரவில் கூறியுள்ளபடி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.
இடங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பொருத்தவரை, சட்டத்தில், விதிமுறைகளில்
கூறியுள்ளபடி, குறிப்பிட்ட விகிதங்களில், தனியார் கல்லூரிகள் பிரித்துக்
கொள்ள வேண்டும். இந்த உத்தரவு, ரிட் மனு மீதான, இறுதி உத்தரவைப் பொருத்து
அமையும்.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, பல் மருத்துவ
கவுன்சிலுக்கு, தனியார் கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...