Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொல்லியல் முதுகலை படிப்பு: முதல்வர் கவனத்துக்கு செல்லாத உத்தரவு


          எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பு, எம்.ஏ., வரலாறுக்கு இணையான படிப்பு கிடையாது எனவும், இவர்களை, உதவிப் பேராசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய முடியாது எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தொல்லியல் படிப்பை முடித்தவர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


         சென்னைப் பல்கலையில், 1980ல், பதிவாளராக இருந்த சுந்தரம், 1980, மார்ச், 24ம் தேதியிட்ட கடிதத்தில், எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல், எம்.ஏ., வரலாறுப் பாடத்திற்கு இணையானது எனவும், இந்தப் படிப்புப் படித்தவர்கள், உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்குத் தகுதியானவர்கள் எனவும், தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

          இதைப் பின்பற்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, வரலாறு மற்றும் தொல்லியல் படித்தவர்கள், உதவிப் பேராசிரியர்களாக, பணி நியமனம் செய்யப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். தற்போதும், அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், வரலாறு மற்றும் தொல்லியல் படித்தவர்கள், ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

          இந்நிலையில், கடந்த ஏப்., 30ம் தேதியிட்ட, உயர்கல்வித் துறை அரசாணையில், "எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல், எம்.ஏ., வரலாறுப் பாடத்திற்கு இணையானது அல்ல" என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில், பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

              உயர் கல்வித்துறை நியமித்த, ஒரு நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு, இந்த உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,), 2001ல் வெளியிட்ட பாடத் திட்டத்தில், வரலாறு மற்றும் தொல்லியலை, ஒரு பாடப் பிரிவாகக் கருதலாம் என, தெரிவித்து உள்ளது.

        அதன்படி, இந்தப் பாடத் திட்டத்தில், இந்திய வரலாறு, மண்டல வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, நாணயவியல், கட்டடக் கலை, கலை உள்ளிட்ட, பல துறை பாடத் திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் துறையைச் சேர்ந்த பல வல்லுனர்களுக்கு, மத்திய அரசு, "பத்மஸ்ரீ" விருது கொடுத்து கவுரவித்திருப்பதும், குறிப்பிடத்தக்கது.

          ஐராவதம் மகாதேவன், நோபுரு கரசிம்மா ஆகியோர், கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆற்றிய பணிக்காக, மத்திய அரசு, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி உள்ளது. இதேபோல், பல்வேறு அறிஞர்களுக்கு, விருதுகளை வழங்கி, மத்திய அரசு, கவுரவித்து உள்ளது.

          நம் தொன்மையான வரலாற்றையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும், உலகளவில் எடுத்துச் செல்லும் பெரும் பணியை, கல்வெட்டு, நாணயவியல் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் செய்து வருகின்றனர். கல்வெட்டுகள், பிராமி எழுத்துக்கள், பண்டைய நாணயங்கள் மூலமான ஆய்வுகளில், தமிழகத்தின் தொன்மையான வரலாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளன.

          இதுபோன்ற நிலையில், வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், தமிழக அரசு, அதிர்ச்சியான உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் மகத்தான பங்கு குறித்து, சரிவரப் புரிந்து கொள்ளாமல், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளதாக, இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

        கிடைக்கப் பெற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிப்படை வரலாற்று ஆதாரங்களை, மேற்கொண்டு ஆய்வு செய்யும் பணி, முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலை, தற்போது உள்ளது. இது போன்ற நிலையில், இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால், தமிழகத்தின் பண்டைக்காலம் மற்றும் இடைக்கால நிலையை, எப்படி அறிந்து கொள்ள முடியும் எனவும், துறை வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

        கொடுமணல், கொற்கை போன்ற இடங்களில் நடைபெறும் ஆய்வுகள், தமிழ் மக்களின் கலாசாரத்தை உயர்த்துகின்றன. இன்னும் இந்த ஆய்வுகள் முற்றுப்பெறும் போது, அதிக பெருமைமிகு தகவல்கள் வெளிவரும். ஆகவே, ஆய்வுக்கு உதவும் படிப்பைப் புறந்தள்ளுவது எவ்விதத்தில் நியாயம் என்பது இவர்கள் கேள்வி.

           அதேபோல், நாணயவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்காமல், எப்படி அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலாசாரம் போன்ற தகவல்களை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும் எனவும், கேள்வி எழுப்புகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்குச் சென்றிருந்தால், இந்த உத்தரவு வந்திருக்காது என்பதும், துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

           இதுகுறித்து, துறை சார்ந்த வல்லுனர்கள், மேலும் கூறியதாவது: வரலாறு மற்றும் தொல்லியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் ஆகியவை, வரலாறுப் பாடங்களுக்கு இணையானது என்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

* வரலாற்றுத் துறைக்கான உதவிப் பேராசிரியர் நியமனத்தில், 50 சதவீத இடங்களை, தொல்லியல் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இதை செய்தால் தான், நமக்குக் கிடைத்துள்ள ஆரம்பக்கட்ட நிலையிலான வரலாற்றுப் பொருட்களை, ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களை முறையாக வெளியே கொண்டுவர முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive