பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ்
வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும்
விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், பாதுகாப்பாக
வைத்திருக்க உதவியாக, கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டு
வழங்கப்பட்டன. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டது.
சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம், 3.50 லட்சம், விழுப்புரம்
போக்குவரத்து கழகத்தில் இருந்து, 4.79 லட்சம், சேலம் போக்குவரத்து
கழகத்தின் சார்பில், 2.79 லட்சம் என, அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம்,
பஸ் பாஸ் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில், 14.02 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு,
இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு, 323.70 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும், விரைவில் பஸ் பாஸ், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும்
அறிவுறுத்தியுள்ளது.
கடந்த, 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரக் காலம்
முன்பாகவே, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளும், போக்குவரத்து கழக
அதிகாரிகளும், பஸ் பாஸ் தொடர்பாக, கலந்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து
கழகங்களிடம் இருந்து, ஏற்கனவே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்ட பட்டியலை, பள்ளி
கல்வித் துறை அதிகாரிகள் பெற்று வருகின்றனர். அந்த பட்டியலில் தேவையான
திருத்தங்கள் செய்யப்பட்டு, கழகங்களுக்கு அனுப்பப்படும் பட்சத்தில்,
உடனடியாக பஸ் பாஸ் தயார் செய்யும் பணியை, கழகங்கள் துவக்கி விடும்.
இதன் மூலம், இரண்டு நாட்களுக்குள் பஸ் பாஸ் தயாரிக்கும் பணியை முடித்து
விடலாம். பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, இரண்டு மாதக்
காலம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், புதிய மாணவர்கள் குறித்த
பட்டியல், பின்னர் தயார் செய்யப்பட்டு, கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, இலவச
பஸ் பாஸ் வழங்கும் பணி நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும்
மாணவர்களுக்கு, பஸ் பாஸ் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலையுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை
மாநகரில், 1,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இலவச
பஸ் பாஸ் விவரங்கள் குறித்த பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்
பெற்று செல்ல வேண்டும்.
ஆனால், 80 சதவீதம் பள்ளிகளின் பட்டியலை பெற்றுச் செல்லவில்லை. இந்த
விஷயத்தில், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே, பஸ்
பாஸ் வழங்கும் பணியை விரைவுபடுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஏற்கனவே, பஸ் பாஸ் வழங்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பெற்று, அதில்
திருத்தம் செய்து, உடனடியாக மாநகர போக்குவரத்து கழகத்திடம்
சமர்ப்பிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
வரும், 15ம் தேதிக்குள் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலை, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி விடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பள்ளிகளில் இருந்து திருத்தம் செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலை
பெறுவதில், கழகங்களுக்கு சிக்கல் நீடிக்கும் நிலையில், மாணவர்களுக்கு பஸ்
பாஸ் வழங்கும் பணியில், மேலும் சில வாரங்கள் கால தாமதம் ஏற்பட
வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையில், நாள்தோறும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று
வருவதற்கு, 15 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை செலவழிக்க நேரிடுகிறது.
ஏற்கனவே, பள்ளி கட்டண உயர்வால் கவலையடைந்துள்ள பெற்றோருக்கு, இலவச பஸ் பாஸ்
வழங்கப்படாததால் கூடுதல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காண, சீருடை அணிந்து பேருந்துகளில் பயணிக்கும், பள்ளி
மாணவ, மாணவியர், இலவசமாக பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என,
பெற்றோர் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...