Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!! நீங்கா நினைவலைகள் !!!


* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

* இந்த வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.
மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள். இன்றைய தலைமுறை ‘மதராசபட்டினம்’ போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.

1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி, Messrs Hutchinson & Coஎன்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகே எலெக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6ந் தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்து போல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநரும், கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள். திடீரென டிக்கெட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே இங்கிருந்தபடி தாவிவிடுவார். டிக்கெட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாத சீசன் டிக்கெட் முறைகளும் அமலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10 வசூலிக்கப்பட்டது.

சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச் செல்லலாம். அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட வில்லை. அதுவும் இல்லாமல், பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. மெட்ராசில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக் கொண்டே இருந்தன. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
டிராம் வண்டி மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்த பயனும் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் டிராம் வண்டிகளை conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்காக சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதற்கு நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்கு மேல் ஒயர்கள் போட்டு, அதில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு ஒப்புக் கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.

இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900இல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904இல் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953ஆம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப் போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இயக்க அந்த நிறுவனமும் தயாராக இல்லை, அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள், அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் நினைவுப் பொருளாக மெல்ல மாறிப் போயின




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive