சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க
தூதரகத்தில் 4 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. இதில், 99 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி உள்ளது. மாநகராட்சி பள்ளியில், தமிழ் வழிக்கல்வியை காட்டிலும், ஆங்கில வழிக்கல்வியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களை சேர்க்கவே அதிகமான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. இந்த ஆண்டு, கூடுதலாக, 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த நான்கு தினங்களில், இந்த பள்ளிகளில் மட்டும், 395 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், இது மேலும் அதிகரிக்கும். மாநகராட்சி சார்பில், 30 இடங்களில் ஏற்கனவே மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக, 10 மழலையர் பள்ளிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளுக்கும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.
குறைந்தபட்சமாக பாலவாய் என்ற இடத்தில், 20 மாணவர்களும், அதிகபட்சமாக எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது பள்ளியில், 99 மாணவர்களும் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வரும் 17ம் தேதி துவங்கி நான்கு நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி வகுப்புகள், பெங்களூருவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக, 60 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
முதல் இரண்டு நாட்களுக்கு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கான, 30 ஆசிரியைகளும், அடுத்த இரண்டு நாட்களுக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகளும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வர். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எளிதாக பயிற்றுவிக்கும் முறை குறித்து இதில் விளக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமெரிக்க தூதரகம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் 60 ஆசிரியைகளுக்கு நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதைத்தவிர ஆங்கில பயிற்சிக்கு மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி பெற்றோரிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...