Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., தேர்வில் நுண்ணறிவை சோதிக்கும் வினாக்கள்


          "ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள் நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில் நிபுணர்கள் பேசினர்.
 
        வரும் ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி., தேர்வு) இலவச பயிற்சி முகாம், தினமலர் நாளிதழ் சார்பில், மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நேற்று நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1க்கு, காலை அமர்விலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 க்கு, மாலை அமர்விலும் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

        அவர்கள் பேசியதாவது: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் (சூழ்நிலையியல், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், குடிமையியல்): இது போட்டித் தேர்வல்ல. தகுதித் தேர்வு. இடைநிலை ஆசிரியர்கள் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்துவர் என்றாலும், 6 முதல் 10ம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும்.

        வினாக்கள் நேரடியாக இல்லாமல், உங்கள் நுண்ணறிவை சோதிப்பதாக, பகுப்பாய்வு செய்து, விடையளிப்பதாக இருக்கும். கணிதத்தில் அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

         எண்ணியல், சராசரி, அல்ஜிப்ரா, சூத்திரங்கள், லாபநஷ்ட கணக்கு, வட்டிவீதம், வடிவியல், புள்ளியியல் முக்கியமானவை. சூழ்நிலையியலில் விண்வெளி, தேசிய சின்னங்கள், நீராதாரங்கள், வனம், சூரியகுடும்பம், நோய்கள் முக்கியமானவை. அறிவியலில் பெரும்பாலும், ஒருவிஷயத்தின் சிறப்பம்சத்தை (ஸ்பெஷாலிட்டி) மையமாக வைத்து, வினாக்கள் கேட்கப்படுகின்றன.

         வரலாறு பாடத்தில், வெளிநாட்டு பயணிகள், இந்திய அரசியலமைப்பு, குடிமையியலில் உள்ளாட்சி மன்றங்கள் போன்றவற்றை அறிய வேண்டும். கடந்தாண்டு காலியிடங்களைவிட, குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றதால், 90 மதிப்பெண் எடுத்தவருக்கும் வேலை கிடைத்தது. இம்முறை காலியிடங்களுக்கும், தேர்வு பெறுவோருக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் என்பதால், அதிக மதிப்பெண் பெற்றால் தான், அரசு பணி வாய்ப்பு கிடைக்கும்.

        நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாசலபதி (ஆங்கிலம்): தமிழை போன்றதல்ல ஆங்கிலம். ஆங்கிலம் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். படிக்க படிக்கத்தான் புரியும். பள்ளியில் மாணவர் தேர்ச்சி பெறும் வகையில், வினாக்கள் இருக்கும்.

                ஆனால், இத்தேர்வில் நீங்கள் தோல்வியடையும் வகையில், வினாக்களை கேட்பர். எனவே, நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆங்கில எழுத்துக்கும், ஒலிக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. எனவே, இலக்கண வினாக்களை திரும்ப திரும்ப வாசித்து, பொருளறிந்து விடை காண வேண்டும். வினாக்கள் குழப்பத்திலும், குழப்பம் ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே புரிந்து படித்து, தோல்வியை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.

           மதுரை வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் (குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்): இப்பாடம் நீங்கள் ஆசிரியர் பயிற்சியின் போது படித்த கடைசி படிப்பு. இதை மறந்திருக்க முடியாது. கல்வி என்பது அறிவை தேடுவது. கற்றல் என்பது நிரந்தர நடத்தை மாற்றத்தை பயிற்சியால் உருவாக்குவது. இதுவே உளவியலின் அடிப்படை.

           இடைநிலை ஆசிரியர்களுக்கு 7 - 11வயதுக்குள்ளும், பட்டதாரி ஆசிரியர்கள் 11 - 15 வயதுக்குள் இருக்கும் மாணவர்களின் உளவியல் ரீதியான வினாக்கள் கேட்கப்படும். இது ஒரு சமூகஅறிவியல் பாடம்.

             இதில் உளவியல் ஆய்வு முறைகள், உளவியல் கல்வி முறைகள், மனிதவளர்ச்சி மேம்பாடு, சூழ்நிலை, மரபு, ஜீன், மரபணு, குழந்தையின் வளர்ச்சியில் 8 படிநிலைகள், வளர்ச்சிசார் செயல்கள், கவனம், அறிதிறன்வளர்ச்சி, பொதுமை கருத்து, கற்பித்தல் முறைகள், கற்றல் கோட்பாடுகள், மனஎழுச்சி, நுண்ணறிவு, பொது அறிவு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் அதிக கவனம் எடுத்து, நுணுக்கமாக படிக்க வேண்டும்.

          திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி உதவியாளர் கணேசன் (தமிழ்): "தமிழ் தானே" என எண்ணாமல், "தமிழ்த்தேனே" என்று கருதி படிக்க வேண்டும். இதில் வினாக்கள் எளிமையாக தெரிந்தாலும், கடினமாகவே இருக்கும். தமிழில் செய்யுள், உரைநடை, இலக்கணம், துணைப்பாடம் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

                  செய்யுளில், 10 ம் வகுப்பு வரையுள்ள மனப்பாட பகுதி மட்டுமின்றி, எல்லாவற்றையும் படிக்க வேண்டும். நூலாசிரியர்கள், செய்யுளில் முக்கிய வரிகளை புரிந்து, படிக்க வேண்டும். பாரதியார், பாரதிதாசன், கவிமணியார், நாமக்கல்லார் பாடல்களை, நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

           இலக்கணத்தை புரிந்து, எளிமையாக்கி படிக்க வேண்டும். நோட்டில் எழுதி, எழுதி படிப்பது நல்லது. துணைப் பாடப் பகுதியில், கதைகள் மூலம் தெரிய வரும் கருத்து என்ன, கதையின் நோக்கம் போன்றவற்றை அறிந்து படிக்க வேண்டும். வினாக்களில் வார்த்தை விளையாட்டு அதிகம் இருக்கும்.

              வினாக்கள் நேரடியாக இல்லாமல், சுற்றி வளைத்தோ, உங்கள் நுண்திறனை சோதிப்பதாகவோ இருக்கும். தேர்வுக்காக படிக்காமல், விஷயத்தை அறிந்து கொள்ள படிக்க வேண்டும். அப்போது தான் தேர்வு எளிதாகும். இவ்வாறு அவர்கள் பேசினர். இரு அமர்விலும், தலா 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive