Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தோற்காதவர்கள் ஜெயிப்பதில்லை


         "பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவியரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை, பெற்றோர் கவனமாக கையாளவேண்டும்" என்கின்றனர், மனநல மருத்துவர்கள்.

           மனித வாழ்க்கை, குழந்தை பருவம் (10 வயது வரை), வளர் இளம் பருவம்(22 வயது வரை), இளம்பருவம் (45 வயது வரை), நடுத்தரம் (65 வயது வரை) என, பல்வேறு பிரிவாக உள்ளது. இவற்றில் வளர் இளம் பருவம் என்பது, சோதனைக்காலமாக கருதப்படுகிறது.

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், உயர்கல்வி உள்ளிட்ட எதிர்வரும் 40 ஆண்டுகால வாழ்வை நிர்ணயிப்பது, இந்த பருவமே. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர், தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி கொள்வதில் ஏற்படும் மன உளைச்சல் ஒருபுறம் என்றால், தேர்வு முடிவு வெளிவந்தவுடன் மதிப்பெண்கள் குறித்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், மேல்நிலை மற்றும் உயர்கல்வி குறித்து வழங்கப்படும் பலதரப்பட்ட ஆலோசனைகள், உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதில் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தங்கள் குழந்தைகள் டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆவதையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். இவ்விரு துறைகள் தவிர்த்து, பல்வேறு துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கும் போதும் மாணவர்களின் விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. இதனால், வளர் இளம் பருவத்திலுள்ள பெரும்பாலான மாணவ, மாணவியர் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சாதிக்கவும் முடியாத நிலை உள்ளது.

மகிழ்ச்சி கொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை

           தேர்வு முடிகள் குறித்து மகிழ்ச்சிகொள்ளவோ, வேதனைப்படவோ தேவையில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது வாழ்வில் ஒரு படிக்கட்டு மட்டுமே. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். ஆர்வம், ஈடுபாடு எத்துறையில் உள்ளதோ அதை கண்டறிந்து செயல்பட்டால் வாழ்வில் சாதிக்கலாம். பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தான் வாழ்வில் சாதனையாளர் ஆவார்கள் என்பதில்லை. கல்வியறிவு இல்லாத எத்தனையோ பேர், பல துறைகளில் சாதனைகள் பல புரிந்துள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பட்டறிவு இருக்கும்.

              மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு திறமைகளில், மற்றவருடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறானது. தனித்தன்மை கொண்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும். ஒவ்வொருவரும் தன்னுடைய திறமைகளை வளர்த்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதே வாழ்வில் வெற்றி பெற உதவும்.

வெறும் படிப்பு ஆராய்ச்சி பணிக்கு மட்டும் தான் உதவும்!

              மனநல நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், "இன்றைய நவீன உலகில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கல்வியறிவுடன், உணர்வு அறிவு (emotional intelligence) கொண்டவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

             படிப்பில் மட்டும் சிறந்து விளங்குவோர் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள மட்டுமே தகுதிவாய்ந்தவர்களாக கருதப்படுவர். பெற்றோர் தங்களின் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிப்பதை தவிர்த்து, குழந்தைகளின் ஆர்வம் மற்றும் ஈடுபாடுக்கு அதிக முக்கியம் அளித்தால், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கும்,"  என்றார்.

பெற்றோர்களால் மட்டுமே முடியும்
      
                 மனநல நிபுணர் டாக்டர் மணி கூறுகையில், "வளர்இளம் பருவம், 12-14, 14-16, 17-19 வயது என மூன்றாக பிரிக்கப்படுகிறது. பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால், வெறுப்பு, கோபம், நம்பிக்கையின்மை ஏற்படும். இத்தகைய சூழலில், அறிவுரை கூறுதல், தாழ்த்தி பேசுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

                தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பார்த்து, "தோற்காதவர்கள் ஜெயிப்பதில்லை... நண்பா வா! நாளைய ஹீரோ நீ தான்" என்ற தன்னம்பிக்கையை சக தோழர்கள் விதைக்க வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள, பெற்றோர்களால் மட்டுமேமுடியும். அதற்கேற்ப சூழலை உருவாக்க வேண்டும். பொதுத்தேர்வில் தோல்வியைடந்தவர்களில் பலர் வாழ்வில் சாதனைகள் பல புரிந்துள்ளனர். இதுகுறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்," என்றார்.

 குழந்தைகள் மீது அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும்

                ஸ்ரீ ஜி கல்லூரி முதல்வர் சேகர் கூறுகையில், "பொதுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தான் வாழ்வை நிர்ணயிக்கின்றன, என்ற தவறான கண்ணோட்டம் சமுதாயத்தில் உள்ளது. எங்கு, என்ன படிக்கிறார் என்பது முக்கியமல்ல; "எப்படி" படிக்கிறார் என்பதே முக்கியம்.

                     பெற்றோர்கள், குழந்தைகள் மீது அழுத்தம் தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நினைத்தது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதை தவிர்த்து, கிடைத்ததை வைத்து, முன்னேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். மாணவர்கள் வளர்ச்சியில், பெற்றோருக்கு 50 சதவீதமும், ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் பங்களிப்பு உள்ளது," என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive