பிளஸ் 2 படிப்பை முடித்தப்பிறகு, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதென்பது மிகவும்
முக்கியமான ஒரு செயல்பாடாக கருதப்படுவதைப் போல், பத்தாம் வகுப்பை
முடித்து, மேல்நிலைப் படிப்பிற்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பதும்
முக்கியத்துவம் பெறுகிறது.
அறிவியல் என்பது, ஒரு மாணவரின் லாஜிக்கல் சிந்தனையை அதிகரிப்பதோடு,
அனலடிகல் திறனை கட்டமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும்,
முடிவெடுக்கும் திறனை கூர்மைப்படுத்துகிறது. இந்த திறன், அன்றாட வாழ்வுக்கு
அவசியமான ஒன்று. அனலிடிகல் திறன் மற்றும் அறிவியலின் மீது ஆர்வம் ஆகிய
பண்புகளைப் பெற்ற ஒருவர், தனது பள்ளி மேல்நிலையில், அறிவியல் படிப்புகளைத்
தேர்ந்தெடுப்பது சிறப்பைத் தரும்.
அறிவியல் பிரிவை, தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் ஒரு மாணவர்
தேர்ந்தெடுக்க, அவரின் ஆர்வம் மற்றும் திறமை ஆகிய அம்சங்கள் முக்கிய
காரணிகளாக இருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் ஒரு
மாணவர், லாஜிக்கல் திறன் உடையவராகவும், ஒரு வேலையின் மீதான தனது
அணுகுமுறையில் ஒழுங்குமுறையை கடைபிடிப்பவராகவும், விஷயங்களை சிறப்பாக
கிரகிப்பவராகவும், பகுப்பாய்வில் ஆர்வமுள்ளவராகவும், புதிய விஷயங்களின்பால்
சிறந்த கவனிப்பு ஆர்வமுள்ளவராகவும் இருத்தல் நலம்.
அதிக நேரம் படிப்பதில் ஆர்வம், சிக்கல் தீர்க்கும் பணியை மகிழ்ச்சியுடன்
எதிர்கொள்ளுதல், அறிவியல் கோட்பாடுகளை சிறப்பான முறையில் புரிந்துகொள்ளும்
திறனுடையவராகவும் இருத்தல் வேண்டும். எந்த விஷயமாகவும் இருந்தாலும்,
எப்படி? ஏன்? என்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், ஒரு மாணவர், தனக்கான மேல்நிலைப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில்,
எதிர்கால பணி வாய்ப்புகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. மேலும்,
மாணவர்கள், மேல்நிலைப் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில், தமது சொந்த
விருப்பத்தைவிட, பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட நேர்கிறது. இதனால்,
தங்களுக்கு விருப்பமில்லாத பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டிய
கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டில், மருத்துவம்
மற்றும் மருத்துவம் சாராத துறைகளைச் சேர்ந்த பாடப்பிரிவுகளை
தேர்ந்தெடுக்கும்போதுதான், மாணவர்கள் அதிக குழப்பத்தையும், சிக்கலையும்
எதிர்கொள்கிறார்கள். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய
பாடப்பிரிவுகள் மருத்துவம் சாராத பிரிவிலும், உயிரியல், இயற்பியல் மற்றும்
வேதியியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய பிரிவு மருத்துவம் சார்ந்த
படிப்பாகவும் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில், பொறுமையுடன் செயல்பட்டு,
நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென்பது நிபுணர்களின் அறிவுரை.
சில காலங்களுக்கு முன்பு, மேல்நிலைப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதானது,
அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பெறும் மதிப்பெண்களின்
அடிப்படையில் இருக்கும். அதேசமயம், மேல்நிலைப் பாடப்பிரிவை
தேர்ந்தெடுப்பதில் எந்தவித நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளும் கிடையாது
என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்வில், பெரியளவில் மதிப்பெண்களைப் பெறாத சில மாணவர்கள்,
தங்களின் பிளஸ் 2 படிப்பிற்கு பின்பாக, ஐஐடி போன்ற பெரிய நிறுவனங்களில்
இடம்பெற்ற உதாரணங்கள் நிறைய உண்டு. இதற்கு காரணம், தங்களுக்கு விருப்பமான
மற்றும் தங்களால் சிறப்பாக சாதிக்க இயலும் பாடப்பிரிவை, மேல்நிலைப்
படிப்பாக தேர்ந்தெடுத்து, அம்மாணவர்கள் படித்ததுதான். மேலும், பத்தாம்
வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பிளஸ் 2.,வில் கோட்டை விட்டதும்
நிறைய உண்டு.
பல மாணவர்கள், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டு பாடங்களையும்
ஒரேசமயத்தில் படித்து வைத்துக்கொண்டால் நல்லது என நினைக்கின்றனர். ஏனெனில்
அப்போதுதான், மருத்துவம் அல்லது பொறியியல் ஆகிய இரண்டு படிப்புகளின்
வாய்ப்புகளையும் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், சில
மாணவர்களுக்கு, இப்படி இரண்டையும் படிப்பது கடினமாக உள்ளது.
மருத்துவப் படிப்பிற்கு உயிரியல் பாடம் அடிப்படையாக இருந்தாலும்,
அறிவியலின் அடிப்படையாக கணிதம் உள்ளது. இன்றைய நிலையில், பல
மருத்துவர்களும், கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே,
ஒரே சமயத்தில் கணிதம் மற்றும் உயிரியலை சேர்த்துப் படிப்பது, எதிர்கால
வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...