பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை கல்வித்துறை கடைசி
நேரத்தில் அறிவித்ததால், கல்வியாண்டின் துவக்க தினமான நேற்று, பெற்றோரும்,
குழந்தைகளும் குழப்பம் அடைந்தனர்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று மாநிலம் முழுவதும்
செயல்பட துவங்கின. தன் பிள்ளைகளை வகுப்பறையில் விட்டு செல்ல வந்த
பெற்றோர், பள்ளியின் தகவல் பலகை வாயிலாக, "பள்ளி செயல்படாது" என்ற
அறிவிப்பை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பள்ளி நிர்வாகங்களுடன்,
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்- 2009"ன் படி நர்சரி
மற்றும் பிரைமரி பள்ளிகள் துவங்க, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட
தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.
மேலும், கட்டட உறுதி, உரிமம், தீயணைப்பு தடையின்மை உள்ளிட்ட
சான்றிதழ்களுடன், உரிய காலத்துக்குள் ஒப்புதலை புதுப்பிப்பதும் பள்ளி
நிர்வாகத்தின் பொறுப்பு. ஆனால், கோவை மாவட்டத்தில் 26 பள்ளிகள் முற்றிலும்
அங்கீகாரம் இல்லாததாலும், நான்கு பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க
தவறியதாலும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இந்த பள்ளிகள் முன்,
பெற்றோர்கள் குவிந்தனர்.
கோவை புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். நர்சரி
பள்ளியின் முன், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் குவிந்தனர். தகவல் அறிந்த
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நேரில் பள்ளிக்கு வந்து
பெற்றோர்களிடம் பேசினார்.
மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் கணேச மூர்த்தி கூறுகையில்,
"இப்பள்ளியில் 216 மாணவர்கள் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை
படிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்துக்கு போதிய அறிவிப்பு கொடுத்தும் அதற்கான
நடவடிக்கை எடுக்காததால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள்
அச்சப்பட தேவையில்லை. பெற்றோர்கள் விரும்பும் அருகாமை பள்ளியில் மாணவர்கள்
சேர்த்துக்கொள்ளப்படுவர். இதுபோல், கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்
அனுப்பப்பட்டுள்ளனர்," என்றார்.
பிற பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து
வகுப்புகள் துவங்கிவிட்டன. பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கும், வசதிக்கும்
தகுந்தபடி பள்ளிகளில் இடம் கிடைக்குமா, அவ்வாறு கிடைத்தாலும் கல்வி கட்டண
சுமையை நம்மால் ஏற்க இயலுமா என்ற பயம் அனைத்து பெற்றோர்கள் முகத்திலும் காண
முடிந்தது.
பெற்றோர்கள் கூறியதாவது
ராஜா, தனியார் நிறுவன ஊழியர்: எனது இரண்டு பிள்ளைகளும்
இங்கே தான் படிக்கின்றனர். வீட்டுக்கு அருகே இருப்பதால் இங்கு படிக்க
வைத்தோம். இப்போது, இரண்டு பேரை எங்கு சேர்ப்பது, ஒரே பள்ளியில் இடம்
கிடைக்குமா, கடந்த 27ம் தேதி கல்விக்கட்டணத்தை கட்டினோம். அப்போதும் கூட,
எந்த தகவல்களும் தெரிவிக்கவில்லை. வேலைக்கு செல்வேனா, வேறு பள்ளிகளை தேடி
அலைவேனா என்று புரியவில்லை.
மேரி, இல்லத்தரசி: எனது மகள் இப்பள்ளியில் தான் இரண்டாம்
வகுப்பு சேர்ந்துள்ளாள். பள்ளிக்கு போகிறோம் என்ற ஆர்வத்தில் புதிய சீருடை,
காலணி, புத்தகப்பை என அனைத்தும் வாங்கி, மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்தாள்.
ஆனால், தற்போது எந்த பள்ளியில் இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.
அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள கல்வித்துறை
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கு ரூபாய் 1,200 முதல் ரூபாய் 5000 வரை கல்விக்கட்டணமாக
செலுத்தினோம். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தவேண்டும். இதை சிறிதும்
எதிர்பார்க்கவில்லை.
லதா, இல்லத்தரசி: பள்ளி அங்கீகாரம் ரத்து செய்வதை
குறைந்தபட்சம் ஏப்ரல், மே மாதங்களில் கல்வித்துறை அறிவித்திருந்தால்,
எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்து இருப்போம். திடீரென்று
அறிவிப்பது முறையல்ல. பிற பள்ளிகளில் வகுப்புகள் துவங்கிவிட்டன. எங்கள்
பிள்ளைகளை சக பள்ளிகளில் சேர்க்கும் வரை அவர்களின் படிப்புகள்
பாதிக்கப்படும். இப்பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்த பின்னரும், எதற்காக
கட்டணம் வசூலித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...